

26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதல் வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டதையடுத்து பாகிஸ்தான் தூதரக துணை அதிகாரிக்கு இந்தியா அழைப்பாணை விடுத்ததையடுத்து, சம்ஜவ்தா ரயில் குண்டுவெடிப்பு விசாரணையில் தாமதம் ஏன் என்று பாகிஸ்தான் கேட்டுள்ளது.
பாகிஸ்தான் தூதரகம் இந்து நாளிதழுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியின் போது, மும்பை பயங்கரவாதத் தாக்குதல் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது முழுக்க முழுக்க நீதித்துறை சார்ந்தது. எல்லா நாடுகளைப்போலவும் பாகிஸ்தானிலும் நீதித்துறை தன்னிச்சையானது.
எனவே இதில் பாகிஸ்தான் அரசு செய்வதற்கு ஒன்றுமில்லை என்று இந்திய அரசிடம் தெரிவித்துள்ளதாக பாக்.தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார்.
“உலகின் எந்த நாட்டிலும் இருப்பது போல் பாகிஸ்தானிலும் நீதித்துறை தன்னிச்சையானது. இதில் பாகிஸ்தான் அரசு தலையிடமுடியாது, எங்கள் வேலை சாட்சியங்களை அளிப்பது, குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவது அவ்வளவே, நீதித்துறையை நாங்கள் கட்டுப்படுத்த முடியாது” என்று பாகிஸ்தான் தூதரக செய்தித் தொடர்பாளர் மன்சூர் அலி மெமான் தெரிவித்துள்ளார்.
2007ஆம் ஆண்டு சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பில் 68 பேர் பலியாகினர். அதில் பெரும்பாலானோர் பாகிஸ்தானியர்கள். இந்தக் குண்டுவெடிப்பிற்குக் காரணமானவர்களும் தண்டிக்கப்படவேண்டும் என்று பாகிஸ்தானிய மக்கள் கருதுகின்றனர்.
ஆகவே அந்த வழக்கு விசாரணையும் தாமதம் ஆகிவருவது கவலையளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.