

கால்நடைத்தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ள ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவுடன் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்துள்ளதற்காக ராகுல் காந்தியை தாக்கிப் பேசி இருக்கிறார் பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி.
ஜார்க்கண்ட் மாநிலம் கோதர்மா , ஜுமர்தாலியா பகுதி யில் புதன்கிழமை நடந்த பொதுக் கூட்டத்தில் நரேந்திர மோடி பேசியதாவது: ஊழல் குற்றச்சாட்டில் தொடர்புடைய தலைவர்களுடன் கூட்டணி வைத்து நாட்டின் செல்வத்தை காப்பாற்றப் போகிறார் காங்கிரஸ் கட்சித் துணைத் தலைவர் ராகுல் காந்தி. நாட்டின் வளத்தை காப்பாற்ற நாட்டு மக்கள் அனைவ ருமே காவலர்களாக விழிப்புடன் இருக்கவேண்டும் என்று சொன்ன ராகுல் காந்தியே, ஊழல் கறை படிந்த தலைவர்களை நம்பி இருக்கிறார்.
காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்துள்ள தலைவர்கள் சமீபத் தில் சிறையிலிருந்து விடுதலை ஆனவர்கள். அவர்களை ராகுல் நம்புவது வேதனையானது.
ராகுல் காந்தி நம்பும் நாட்டின் இன்னொரு காவலர் அசோக் சவாண். இவர் ஆதர்ஷ் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட் டுள்ளவர். லாலு பிரசாத் யாதவ் கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டவர். இத்தகைய தலைவர்களை கூட வைத்துக்கொண்டு ராகுலால் நாட்டை காப்பாற்ற முடியுமா என்பதுதான் கேள்வி.
கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட் டுள்ள லாலு, 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தற்போது ஜாமீனில் விடுதலை ஆகி இருக்கிறார். அத்தகைய நபருடன் காங்கிரஸ் கட்சி பிஹாரிலும் ஜார்க்கண்டிலும் கூட்டணி வைத்துள்ளது. பாலுக்கு காவல் வைக்க நம்பத்தக்க பூனை எதுவும் எனக்கு கிடைக்கவில்லை.
பாஜகவின் வெற்றி முன்கூட்டியே உறுதியாகிவிட்டது என்ற போதிலும் அதற்கு தேர்த லில் 300 இடங்கள் கிடைப்பதை வாக்காளர்கள் உறுதி செய்ய வேண்டும். வலிமைமிகு அரசு அமைந்தால் நமது விரோதி நாடுகளும் தமது நடவடிக்கையை மாற்றிக்கொள்ளும். அமெரிக்கா போன்ற வல்லரசுகளும் இந்தியா வில் வலிமையான அரசு அமைந் தால் அதை ஏற்கும். மத்தியில் அமையும் அரசுக்கு அதிகாரம் கிடைப்பதற்கான வழிதான் ஜனநாயகம்.
இயற்கைச் செல்வ வளத்தில் ஜார்க்கண்ட் பணக்கார மாநிலம். ஆனால் இந்த மாநிலத்தில் வாழும் மக்களோ ஏழைகளாக வறுமையில் உழல்கின்றனர். நான் பதவிக்கு வந்தால் இந்த மாநில மக்களின் வறுமைக்கு முடிவு காண்பேன்.
பா.ஜ.க. வை ஆட்சியில் அமர்த்தினால் கோதர்மாவில் மைக்கா தொழிலை மீண்டும் உயிர்ப்பிப்பேன். சட்ட விரோத மாக மைக்கா தொழில் நடத்துவ தாக கூறி போலீஸாரும் வனத் துறையினரும் தொழிலாளர்களை சிறையில் அடைக்கிறார்கள். ஆனால் மைக்கா தொழில்தான் அவர்களின் வாழ்வாதாரம் என்பதை அவர்கள் உணர மறுக்கின்றனர் என்றார் மோடி.
சியாங்கி பகுதியில் நடந்த கூட்டத்தில் மோடி ஆற்றிய உரை: உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சித்தலைவர் முலாயம் சிங் யாதவ், ஜார்க்கண்டில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபு சோரன், பிஹாரில் ஆர்.ஜே.டி. தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் குடும்ப வாரிசு அரசியல் நடத்து கின்றனர். பரம்பரை ஆட்சிக்கு ஜனநாயகத்தில் இடம் இல்லை.மத்தியில் உள்ள காங்கிரஸ் கூட்டணி அரசு நாட்டுக்கே சுமையாகிவிட்டது.அதை மாற்றியாகவேண்டும் என்றார்.
பலமு (தனி) தொகுதியில் மாநில காவல்துறை முன்னாள் இயக்குநர் வி.டி.ராம், பாஜக தரப்பில் நிறுத்தப்பட்டுள்ளார்.