

மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மக்களவையில் கொண்டுவந்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் செவ்வாய்க்கிழமை மதியம் தொடங்கியது. புதன்கிழமையும் தொடரும் இந்த விவாதத்துக்குப் பின்னர், பிரதமர் மோடி மக்களவையில் வியாழக்கிழமை பதிலுரை வழங்குவார் எனத் தெரிகிறது.
முதல் ஒத்திவைப்புக்குப் பின் 12 மணிக்கு கூடிய மக்களவையில் காங்கிரஸ் சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்த தருண் கோகோய் தான் விவாதத்தை தொடங்கி வைத்தார். அவர் தனது பேச்சில், “இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவர நாங்கள் நிர்பந்திக்கப்பட்டுள்ளோம். இது பலத்தை நிரூபிப்பதற்கான தீர்மானம் அல்ல. இது மணிப்பூருக்கு நீதி வேண்டிய கொண்டுவரப்பட்ட தீர்மானம்" என்றார்.
பாஜக சார்பில் முதல் நபராக நிஷிகாந்த் துபே பேசினார். அவர், "காலையில் நடந்த பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் பேசிய பிரதமர், இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் அரசு மீதான அவநம்பிக்கையில் கொண்டுவரப்பட்டது இல்லை. மாறாக, எதிர்க்கட்சிகள் அவர்களுக்குள் யாரையெல்லாம் நம்பலாம் என்பதை தெரிந்து கொள்வதற்காக கொண்டுவரப்பட்டுள்ளது என்று கூறியதாக தெரிவித்தார்.
மேலும், தனது பேச்சில் சோனியா காந்தியை தாக்கிப் பேசிய துபே, “சோனியா காந்திக்கு இப்போது இரண்டு வேலைகள்தான் உள்ளன. ஒன்று மகனுக்கு பாதையமைத்துக் கொடுப்பது, இரண்டாவது மருமகனுக்கு பரிசளிப்பது” என்றார்.
மக்களவையில் கோகாய் பேசிக்கொண்டிருந்தபோது, மக்களவை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பும் சன்சத் தொலைக்காட்சியில் ஏன் நம்பிக்கையில்லா தீர்மானம் பற்றி தெரிவிக்காமல் விவரத்தை இருட்டடிப்புச் செய்கிறீர்கள் என்று காங்கிரஸ் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்தப் பிரச்சினை சீர் செய்யப்பட்டது. இதனால் சிறிது நேரம் தடைபட்ட விவாதம் தொடர்ந்தது.
டி.ஆர்.பாலு சரமாரி குற்றச்சாட்டு: நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து பேசிய திமுக எம்.பி டி.ஆர்.பாலு, "மணிப்பூர் முதல்வர் உதவியின்றி தவிக்கிறார். பிரதமர் மோடி நாடாளுமன்றத்துக்கும் வருவதில்லை. மே மாதம் முதல் இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூருக்கும் செல்லவில்லை" என்று குற்றம்சாட்டினார்.
அதேபோல், நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்துப் பேசிய திரிணமூல் காங்கிரஸ் எம்.பி சவுகதா ராய், “பிரதமர் மோடிக்கு நாடாளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லை” என்று குற்றம்சாட்டினார்.
‘அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு பதிவுக் கட்டணம் உயர்த்தப்படவில்லை’: அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணம் உயர்த்தப்படவில்லை. சொந்த வீடு வாங்குவோருக்கு பதிவுக் கட்டண உயர்வு என்று தவறாக செய்தி பரப்பப்படுவது உண்மைக்குப் புறம்பானதாகும் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
திரிணமூல் காங். எம்.பி டெரிக் ஓ பிரையன் சஸ்பெண்ட்: திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி டெரிக் ஓ பிரையன் எஞ்சிய மழைக்கால கூட்டத்தொடர் முழுவதுக்கும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவைக்கு கட்டுப்படாத அத்துமீறிய செயல்களால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ராகுல் காந்திக்கு மீண்டும் அரசு பங்களா ஒதுக்கீடு: ராகுல் காந்திக்கான தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்ததைத் தொடர்ந்து, அவர் மீண்டும் எம்.பி ஆன நிலையில், அவருக்கு மீண்டும் அரசு பங்களா ஒதுக்கப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜியிடம் 9 மணி நேரம் வரை விசாரணை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் முதல் 9 மணி நேரம் வரை விசாரிக்க அமலாக்கத் துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு விசாரணையை வரும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் முடிக்க மத்திய குற்றப் புலனாய்வு காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், விசாரணையை முடிக்க தவறும் பட்சத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
என்எல்சி விவகாரம்: திமுக Vs பாமக: “என்எல்சி விவகாரத்தில் சென்னையில் “வீராவேசம்” செய்யும் அன்புமணி ராமதாஸ், டெல்லியில் கைகட்டி நின்று ஒன்றிய அரசுக்கு அடிமையாக இருப்பது ஏன்? டெல்லி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மருத்துவக் கல்லூரி வழக்கா? அல்லது அந்த நிலுவையில் உள்ள வழக்கை வைத்து அமலாக்கத் துறை கைது செய்துவிடப் போகிறது என்ற கலக்கமா?" என்று தமிழக வேளாண் மற்றும் உழவர் நலன் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக அரசின் தோல்வி, துரோகத்தை மறைக்க அன்புமணி மீது பழி: இதற்கு பதிலடி தந்துள்ள பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, "என்எல்சிக்கு வழங்கப்பட்டுள்ள குத்தகை உரிமத்தை ரத்து செய்யும் அதிகாரத்தை தமிழக அரசு செயல்படுத்தாமல் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை பன்னீர்செல்வம் கேள்வி கேட்பதே அவரது கையாலாகாத தனத்தைத்தான் காட்டுகிறது.
திமுக அரசின் தோல்வியையும் துரோகத்தையும் மூடி மறைப்பதற்காக அன்புமணி ராமதாஸ் மீது பன்னீர்செல்வம் பழி போட முயல்வதை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்" என்று கூறியுள்ளார்.
கர்நாடக காங்கிரஸை ஸ்டாலின் நிர்பந்திக்காதது ஏன்? - இபிஎஸ்: "உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, தமிழக பாசனத்துக்கு கர்நாடக காங்கிரஸ் உடனடியாக காவிரியில் வழங்க வேண்டிய பங்கு நீரை வழங்கினால்தான், பெங்களூருவில் நடைபெறும் கூட்டணிக் கூட்டத்தில் கலந்துகொள்வேன் என்று முதல்வர் ஸ்டாலின் நிர்பந்தப்படுத்தி இருந்தால், காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்திருக்கும். டெல்டா மாவட்ட விவசாயிகள் கஷ்டத்துக்கு ஆளாகியிருக்க மாட்டார்கள்" என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
“இந்தியா வெல்லும் என கூறலாம். ஆனால்...”: "நான் ஒரு இந்தியன் என்பதால் இந்தியாதான் உலகக் கோப்பையை வெல்லும் என்று கூறலாம். ஆனால், இந்த இந்திய அணியின் மிடில் ஆர்டர் குறித்து ஏகப்பட்ட சிக்கல்கள் உள்ளன. இந்த சிக்கல்கள் களையப்படாவிட்டால் நிச்சயம் இந்திய அணி தடுமாறும். இந்திய மிடில் ஆர்டரின் பெரிய பிரச்சினை வீரர்களின் காயங்கள். அழுத்தம் அதிகமான ஆட்டங்களில் நாம் சோதனைகள் மேற்கொள்ளுதல் கூடாது" என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.