ராகுல் காந்திக்கு மீண்டும் துக்ளக் லேனில் அரசு பங்களா ஒதுக்கீடு

துக்ளக் லேனில் உள்ள அரசு பங்களா
துக்ளக் லேனில் உள்ள அரசு பங்களா
Updated on
1 min read

புதுடெல்லி: ராகுல் காந்திக்கான தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்ததைத் தொடர்ந்து, அவர் மீண்டும் எம்.பி ஆன நிலையில், அவருக்கு மீண்டும் அரசு பங்களா ஒதுக்கப்பட்டுள்ளது.

மக்களவையின் வீடு ஒதுக்கீடு செய்யும் குழு, துக்ளக் லேனில் ராகுல் வசித்து வந்த பழைய பங்களாவையே அவருக்கு மீண்டும் ஒதுக்கீடு செய்துள்ளது. தனது பழைய வீட்டைத் திரும்ப பெற்ற நிலையில், ‘இந்தியா முழுவதும் என் வீடு’ என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

குஜராத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், ராகுல் காந்தியின் தண்டனையை உச்ச நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை (ஆக.4) நிறுத்திவைத்தது. இதனைத் தொடர்ந்து திங்கள்கிழமை அவரது தகுதி இழப்பு திரும்பப் பெறப்பட்டு, அவர் மீண்டும் எம்பி ஆனார். இதையடுத்து, 4 மாத இடைவெளிக்குப் பிறகு, அவை நடவடிக்கைகளில் ராகுல் காந்தி பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, கர்நாடகாவில் 2019 மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின்போது, ‘‘எல்லா திருடர்களுக்கும் மோடி என பெயர் வந்தது எப்படி’’ என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன்மூலம் மோடி சமூகத்தினரை ராகுல் அவமதித்துவிட்டதாக, குஜராத் பாஜக எம்எல்ஏ பர்னேஷ் மோடி, சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி ராகுலுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மார்ச் 24-ம் தேதி ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதி இழந்ததாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஏப்ரல் 22-ம் தேதிக்குள் அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என்று மக்களவைச் செயலகம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. ராகுல் காந்தி ஏப்ரல் 4ம் தேதி அதுவரை தான் வசித்து வந்த அரசு பங்களாவை காலி செய்து சாவியை உரியவர்களிடம் ஒப்படைத்தார்.

ராகுல் காந்தி கடந்த 2004-ம் ஆண்டு முதல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வந்தார். 2004 முதல் 2019 வரை அமேதி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அவர், 2029 முதல் வயநாடு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வந்தார். டெல்லியில் உள்ள துக்ளக் சாலையில் 12-ம் எண் கொண்ட வீடு அவருக்கு ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in