

ஹைதராபாத் சர்வதேச விமான நிலையத்தில், தனியார் விமான பணிப்பெண்ணிடம் இரண்டு இளைஞர்கள் போதையில் தகராறு செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. தகராறு செய்த அந்த இளைஞர்கள் இருவரும் மீதும் பொது இடத்தில் இடையூறு செய்ததாக போலீஸார் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை இரவு ஹைதராபாத் சர்வதேச விமான நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து ராஜீவ்காந்தி சர்வதேச விமான நிலைய காவல்நிலைய உதவி ஆய்வாளர் ரமேஷ் நாயக் கூறும்போது, "சனிக்கிழமை இரவு தனியார் விமானம் நிறுவனத்தின் பணிப்பெண்ணிடம் இரண்டு இளைஞர்கள் தகராறு செய்தனர். அந்தப் பெண், துணிச்சலுடன் அந்த இளைஞர்களை காவல்நிலையத்துக்கு அழைத்துவந்தார். அங்கே, அந்தப் பெண் வலியுறுத்தலின்படி அந்த இளைஞர்கள் இருவரும் அப்பெண்ணின் காலைத்தொட்டு மன்னிப்பு கோரினர். இனிமேல் இப்படி செய்யமாட்டோம் எனக் கூறினர். இதனையடுத்து அந்தப் பெண் அவர்கள் இருவர் மீதும் போலீஸில் புகார் கொடுக்காமல் சென்றார். விசாரணையில், அந்த இளைஞர்கள் இருவர் மாணவர்கள் என்பது தெரியவந்தது. மாணவர்கள் இருவரும் குடிபோதையில் இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து பொது இடத்தில் இடையூறு செய்ததாக அவர்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளோம்" என்றார்.
இதற்கிடையில், அந்தப் பெண்ணிடம் இளைஞர்கள் தகராறு செய்ததை விமான நிலையத்தில் இருந்த சிலர் தங்கள் மொபைல் போனில் பதிவு செய்துள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.