ராகுல் ‘ரிட்டர்ன்ஸ்’ முதல் சிக்கலில் செந்தில் பாலாஜி வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ ஆக.7, 2023

ராகுல் ‘ரிட்டர்ன்ஸ்’ முதல் சிக்கலில் செந்தில் பாலாஜி வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ ஆக.7, 2023
Updated on
3 min read

“ஜனநாயகம் இருக்க வேண்டுமா என்பதற்கானது 2024 தேர்தல்”: இந்தியாவில் ஜனநாயகம் இருக்க வேண்டுமா இருக்க முடியாதா என்பதற்கான தேர்தல் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மறைந்த திமுக தலைவர் மு.க. கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள ஆடியோ செய்தியில் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சென்னையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணி மேற்கொண்டனர். சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலையில் இருந்து தொடங்கிய இந்தப் பேரணி, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் நிறைவடைந்தது.

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செல்லும்: உச்ச நீதிமன்றம்: தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்தது செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜியை ஆகஸ்ட் 12-ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதியளித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பேச்சு: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு முதல்முறையாக புதுவைக்கு 2 நாள் அரசு முறை பயணமாக திங்கள்கிழமை வந்தார். ஜிப்மர் புற்றுநோய் சிகிச்சை மையத்தில் புதிதாக ரூ.17 கோடியில் நிறுவப்பட்டுள்ள புற்றுநோயாளிகளுக்கான கதிரியக்க சிகிச்சை கருவியை இயக்கி, அதனை மக்களுக்கு அவர் அர்ப்பணித்தார். பின்னர், புதுவை வில்லியனூர் ஒதியம்பட்டு சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆயுஷ் மருத்துவமனையை காணொலி மூலம் திறந்து வைத்தார்.

ஜிப்மர் அப்துல் கலாம் கலையரங்கில் நடந்த விழாவில் அவர் பேசும்போது, “நாட்டிலுள்ள அனைத்து மொழிகளும் என் மொழிதான்” என்று பேசினார். புதுவையின் வளர்ச்சியில் மத்திய அரசு அக்கறை கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

“தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் உருவாக்கம் எப்போது?”- ராமதாஸ்:“ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரே நாளில் 17 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுவது எப்போது?” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக அரசு மீது அண்ணாமலை சாடல்: "மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நூறாவது பிறந்த நாளைக் கொண்டாட, பெருமளவில் நிதி ஒதுக்கப்படுவதால், மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உபகரணங்களை வழங்காமல் அலைக்கழிக்கிறதா தமிழக அரசு? அரசுப் பணத்தை எதற்குச் செலவிட வேண்டும் என்பதையே இவர்கள் உணரவில்லை" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

மீண்டும் எம்பி ஆனார் ராகுல் காந்தி: காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தியின் தகுதி இழப்பை மக்களவை செயலகம் திங்கள்கிழமை ரத்து செய்ததைத் தொடர்ந்து அவர் மீண்டும் மக்களவை எம்பி ஆகியிருக்கிறார். இது குறித்து மக்களவை செயலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்," நீதித்துறையின் உத்தரவுக்கு உட்பட்டு தகுதி நீக்கம் நிறுத்திவைக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மோடி பெயர் குறித்த அவதூறு வழக்கில் காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தியின் 2 ஆண்டு சிறைத் தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றம் வந்த ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு: தகுதி இழப்பு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நடப்பு மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ராகுல் காந்தி 4 மாதங்களுக்கு பின்னர் நாடாளுமன்றம் வந்தார். அவரை ‘ராகுல் காந்தி ஜிந்தாபாத்’ என முழங்கி எதிர்க்கட்சிகளின் ‘இண்டியா’ கூட்டணி எம்.பி.க்கள் வரவேற்றனர். முன்னதாக, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு ராகுல் காந்தி மரியாதை செய்தார்.

மாநகராட்சி பள்ளிகளுக்கு ரூ.1.81 கோடிக்கு உதவிய அப்பள வியாபாரி!: மதுரை தத்தனேரியைச் சேர்ந்த 86 வயது அப்பள வியாபாரி ராஜேந்திரன், தனது வியாபாரத்தில் கிடைக்கும் வருவாயின் ஒரு பகுதியை ஏழை, எளிய குழந்தைகள் படிப்புக்கும், மாநகராட்சி பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைகள் கட்டிகொடுப்பதற்கும் உதவி வருகிறார்.

குறிப்பாக, 2018-ம் ஆண்டு மதுரை மாநகராட்சி திரு.வி.க.மேல்நிலைப்பள்ளியில் 10 வகுப்பறைகள், இறைவணக்க கூட்ட அரங்கம், இரு சக்கர வாகனம் நிறுத்தும் இடம் போன்வற்றை ரூ.1.10 கோடியில் கட்டிக் கொடுத்துள்ளார். இந்த ஆண்டு ரூ.71 லட்சத்து 45 ஆயிரத்தில் மாநகராட்சி கைலாசாபுரம் ஆரம்பப்பள்ளிக்கு 4 வகுப்பறைகள், ஒரு ஆழ்துளை கிணறு, கழிப்பறைகள், மாணவர் அமர்ந்து உண்ணும் இடம் போன்றவை கட்டிக் கொடுத்துள்ளார்.

மதுரை மாநகராட்சி பள்ளிகளுக்கு வகுப்பறைகள் கட்டுவதற்கு ரூ.1.81 கோடி அளவில் நிதியுதவி அள்ளிக் கொடுத்த ராஜேந்திரனை பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார்.

அப்போது, “நானும் மாநகராட்சி பள்ளிக்கு நன்கொடை கொடுத்தேன். ஆனால், ‘இந்து தமிழ் திசை’ செய்தி ஒன்றில் அப்பள வியாபாரி ராஜேந்திரனின் நன்கொடை விவரம் குறித்து வந்த செய்தியைப் பார்த்து திகைத்துப்போய்விட்டேன். அந்த அளவுக்கு இவர் கோடிக்கணக்கில் அள்ளிக் கொடுக்கணும் என்ற அவசியம் இல்லை. அதையும் கொடுத்து இருக்கிறார் என்றால் இவர் ஒரு மகான். பணம் இருக்கக் கூடிய பணக்காரர்கள் கொஞ்சமும் யோசிக்காமல் அரசு பள்ளிகளுக்கு உதவ முன் வர வேண்டும். அதற்கு மிகப் பெரிய வழிகாட்டிய இருக்கக் கூடியவர், கோடிகளை அள்ளிக் கொடுத்த நமது ராஜேந்திரன் அய்யா” என்று சாலமன் பாப்பையா புகழாரம் சூட்டினார்.

மணிப்பூர் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் சிபிஐ விசாரணை: கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்புடைய 12 வழக்குகளை சிபிஐ விசாரிக்கும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கியில் இந்தியா முதலிடம்: 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் அரங்கில் கடந்த 3-ம் தேதி தொடங்கி12-ம் தேதி வரை நடக்கிறது. இந்த தொடரில் இதுவரையில் 3 ஆட்டங்களில் விளையாடி உள்ள இந்திய அணி 2 வெற்றி, ஒரு டிராவை பதிவு செய்துள்ளது. இதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் இந்திய அணி 7 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in