புவி தாழ்வட்ட சுற்றுப்பாதையில் ‘பிஎஸ்-4’ இயந்திரம்: விண்வெளி ஆய்வு மையம் தகவல்

புவி தாழ்வட்ட சுற்றுப்பாதையில் ‘பிஎஸ்-4’ இயந்திரம்: விண்வெளி ஆய்வு மையம் தகவல்
Updated on
1 min read

சென்னை: பிஎஸ்எல்வி சி-56 ராக்கெட்டின் பிஎஸ்-4 இயந்திரம் புவி தாழ்வட்ட சுற்றுப்பாதைக்கு உந்தி தள்ளப்பட்டதாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது.

சிங்கப்பூருக்குச் சொந்தமான ‘டிஎஸ்-சார்’ உள்ளிட்ட 7 செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி சி-56 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து கடந்த ஜூலை மாதம் 30-ம் தேதி இஸ்ரோ விண்ணில் செலுத்தியது.

அனைத்து செயற்கைக்கோள்களும் திட்டமிட்ட சுற்றுப்பாதைகளில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன. அதன் பின்னர் ராக்கெட்டின் இறுதி நிலையான பிஎஸ்-4 இயந்திரத்தை புவி தாழ்வட்ட சுற்றுப்பாதைக்கு கொண்டு வரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

அந்த வகையில் பிஎஸ்-4 இயந்திரம் 300 கிலோமீட்டர் தொலைவு கொண்ட தாழ்வட்டப் பாதைக்கு தற்போது கொண்டுவரப்பட்டுள்ளது.

இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது: புவியில் இருந்து 530 கிலோமீட்டர் தொலைவு கொண்ட சுற்றுப்பாதைகளில்தான் பெரும்பாலான செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்படுகின்றன. இதனால் ஏற்படும் விண்வெளிக் கழிவுகளை தவிர்க்கும் வகையில், தாழ்வட்டப் பாதையில் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்துவதற்கான ஆய்வில் உலக நாடுகள் ஆர்வம் காட்டுகின்றன.

இதன்மூலம் பிஎஸ்-4 இயந்திரத்தை புவியின் வளிமண்டலப் பகுதிக்குள் எளிதில் கொண்டுவந்து எரிக்க முடியும். அப்போதுதான் ராக்கெட்டின் எஞ்சிய பாகங்கள் விண்வெளிக் கழிவுகளாக மாறாமல் இருக்கும்.

அதற்கான சோதனை முயற்சியாக தற்போது பிஎஸ்-4 இயந்திரம் இருமுறை இயக்கப்பட்டு, 300 கிலோமீட்டர் தொலைவு கொண்ட புவியின் தாழ்வட்ட சுற்றுப்பாதைக்கு உந்தி தள்ளப்பட்டது. மேலும், அதில் உள்ள எரிபொருட்களும் வெளியேற்றப்பட உள்ளன.

இதன் காரணமாக பிற ஆய்வுக் கருவிகளுடன் மோதும்போது ஏற்படும் சேதம் குறைக்கப்படும். மேலும், விண்வெளிக் கழிவுகள் உருவாவதும் தடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in