

ஆர்.எஸ்.எஸ் உறுப்பினரான பிரதாப் வேதிக், பயங்கரவாதி ஹபீஸ் சையீதை சந்திக்க, இஸ்லாமாபாதில் உள்ள இந்திய தூதரகம் ஏற்பாடு செய்ததா? என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
பாகிஸ்தானில் பதுங்கியுள்ள லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி ஹபீஸ் சயீதை, இந்தியப் பத்திரிகையாளரும், யோகா குரு பாபா ராம்தேவின் நண்பருமான பிரதாப் வேதிக் சந்தித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் இன்றும் இரண்டாவது நாளாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளியை ஏற்படுத்தியது. இதனால், அவை நடவடிக்கைகள் வெகுவாக பாதித்தன.
இந்த நிலையில், செய்தியாளர்களிடம் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறும்போது, "ஆர்.எஸ்.எஸ் பின்புலம் கொண்ட பிரதாப் வேதிக்கும், பயங்கரவாதி ஹபீஸ் சயீதும் சந்திக்க, இஸ்லாமாபாதில் உள்ள இந்திய தூதரகம் ஏற்பாடு செய்ததா? என்பது தெரிய வேண்டும்.
இது குறித்து தெரிந்துகொள்ள நாங்கள் அனைவருமே ஆர்வமாக உள்ளோம். மேலும், வேதிக் ஒரு ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று" என்று கூறினார்.
லஷ்கர் இயக்கத் தலைவரை சந்தித்த பத்திரிகையாளர் பிரதாப் வேதிக், விவேகானந்தா சர்வதேச அறக்கட்டளையின் உறுப்பினர் ஆவார். இதே அறக்கட்டளையின் உறுப்பினர்களான நிருபேந்திர மிஸ்ரா, பி.கே மிஸ்ரா மற்றும் அஜித் தோவல் ஆகிய மூவரும், பிரதமர் நரேந்திர மோடியின் அலவலக பொறுப்பில் முக்கிய பதவிகளில் உள்ளனர்.
நிருபேந்திர மிஸ்ரா, பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மை செயலாளராகவும், பிரதமர் அலுவலக கூடுதல் முதன்மை செயலாளராக பி.கே மிஸ்ரா மற்றும் பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகாரக அஜித் தோவல்லும் பதவி வகிக்கின்றனர் என்பது கவனிக்க வேண்டிய விவகாரம் என்று காங்கிரஸ் கட்சி குறிப்பிட்டுள்ளது.
ராகுலுக்கு ஆர்.எஸ்.எஸ். மறுப்பு:
ஹபீஸ் - வேதிக் சந்திப்பு குறித்த ராகுலின் கருத்தை ஆர்.எஸ்.எஸ் மறுத்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ராம் மாதவ் கூறும்போது, 'பிரதாப் வேதிக் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர் அல்ல. சல்மான் குர்ஷித் மற்றும் மணிசங்கர் அய்யருடன் எல்லாம் சேர்ந்து சுற்றுபவர் எப்படி ஆர்.எஸ்.எஸ் உறுப்பினராக இருக்கு முடியும்?" என்றார்.