நடிகர் திலீப் துபாய் செல்ல கேரள உயர் நீதிமன்றம் அனுமதி

நடிகர் திலீப் துபாய் செல்ல கேரள உயர் நீதிமன்றம் அனுமதி
Updated on
1 min read

தன்னுடைய உணவகத்தின் கிளையைத் திறப்பதற்காக துபாய் செல்ல நடிகர் திலீப்புக்கு கேரள உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

அதே நேரத்தில் வெளிநாடு செல்ல அனுமதித்துள்ள நீதிமன்றம், 6 நாட்களுக்கு மட்டும் பாஸ்போர்ட்டை விடுவித்து ஜாமீன் அளித்துள்ளது.

கேரளாவில் பிரபல நடிகை படப்பிடிப்பில் பங்கேற்று விட்டு திருச்சூரில் இருந்து கொச்சிக்கு காரில் செல்லும் போது கடத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். கடந்த பிப்ரவரி மாதம் நடந்த இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக பல்சர் சுனி மற்றும் அவரது கூட்டாளிகளை ஒரு வாரத்தில் போலீஸார் கைது செய்தனர்.

இந்தக் கடத்தலில் பிரபல மலையாள நடிகர் திலீப்புக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்களைப் போலீஸார் பறிமுதல் செய்தனர். அதன் அடிப்படையில் கடந்த ஜூலை 10-ம் தேதி திலீப்பை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன்பின்னர் அவர் ஜாமீன் கேட்டு 4 முறை விண்ணப்பித்தார். அவை நிராகரிக்கப்பட்டன. அதன்பின்னர் 5-வது முறை ஜாமீன் கேட்டு விண்ணப்பித்தார். அதை ஏற்றுக்கொண்ட கேரள உயர் நீதிமன்றம், திலீப்புக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

ஜாமீனில் வெளியில் வந்த திலீப் சபரிமலை ஐயப்பன் கோயில் உட்பட பல கோயில்களுக்குச் சென்று வருகிறார். இதற்கிடையில் உணவகம் திறக்க துபாய் செல்ல நடிகர் திலீப்புக்கு உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

அரசு தரப்பு எதிர்ப்பு

இந்நிலையில் திலீப்பின் ஜாமீனுக்கு அரசு தரப்பு கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. திலீப் வெளியேவந்து சாட்சிகளையும் ஆதாரங்களையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ கலைக்கக் கூடும் என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அரசுத் தரப்பு அவ்வாறு நினைத்தால், திலீப்பின் ஜாமீனுக்கு எதிராக மேஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு அளிக்கலாம் என்று கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in