Last Updated : 06 Aug, 2023 10:38 AM

4  

Published : 06 Aug 2023 10:38 AM
Last Updated : 06 Aug 2023 10:38 AM

குடியரசுத் தலைவர் புதுச்சேரி வருகை: வாய்க்காலை திரைச்சீலை அமைத்து மூடிய அதிகாரிகள்

புதுச்சேரி தாவரவியல் பூங்கா அருகே தீரைச்சீலை அமைத்து மூடப்பட்டுள்ள வாய்க்கால்

புதுச்சேரி: குடியரசுத் தலைவர் செல்லும் வழியில் 15 ஆண்டுகளாக கட்டி முடிக்காத உப்பனாறு பாலம் கட்டுமானப்பணியால் வாய்க்காலை தீரைச்சீலை அமைத்து புதுச்சேரி அதிகாரிகள் மூடியுள்ளனர். ட்ரோன்கள், பலூன்கள் 7, 8-ம் தேதிகளில் பறக்க விட தடை விதிக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இரண்டு நாள் பயணமாக புதுச்சேரி வருகிறார். நாளை ( 7-ம் தேதி) காலை 9.55 மணிக்கு சென்னையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுவைக்கு புறப்பட்டு, 10.35 மணிக்கு புதுவை லாஸ்பேட்டை விமான நிலையம் வந்தடைகிறார். அவரை துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் வரவேற்கின்றனர்.

அங்கிருந்து புறப்பட்டு கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக ஜிப்மர் செல்கிறார். அங்கு ரூ.17 கோடியில் புதிதாக வாங்கப்பட்டுள்ள புற்றுநோய்க்கான நவீன கதிர்வீச்சு சிகிச்சை இயந்திரத்தை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கிறார். தொடர்ந்து காலை 11.05 மணி முதல் 12.45 மணி வரை நடைபெறும் விழாவில் பங்கேற்கிறார். இவ்விழாவிலேயே வில்லியனூரில் 50 படுக்கைகள் கொண்ட ஆயுஷ் மருத்துவமனயை திறந்து வைக்கிறார்.

அதையடுத்து மதியம் 12.45 மணிக்கு கடற்கரை சாலையில் உள்ள நீதிபதிகள் விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறார். மாலை 4 மணிக்கு புறப்பட்டு மணக்குள விநாயகர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார்.

மாலை 4.40 மணிக்கு முருங்கப்பாக்கம் கைவினை கிராமத்துக்கு சென்று கலைநிகழ்வுகள் பார்க்கிறார். மாலை 5.45 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். 6.30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, மீண்டும் விடுதிக்கு வந்து ஓய்வெடுக்கிறார்.

இரவு 8 மணிக்கு ஆளுநர் மாளிகையில் குடியரசுத் தலைவருக்கு பாரம்பரிய இரவு விருந்து அளிக்கப்படுகிறது. பின்னர் விடுதியில் ஓய்வெடுக்கும் குடியரசுத் தலைவர் மறுநாள் 8ம் தேதி காலை 6 முதல் 6.45 மணி வரை கடற்கரை சாலையில் நடைபயிற்சி மேற்கொள்கிறார். அவர் அமரும் வகையில் கல் மேடைகள் சிவப்பு வர்ணம் பூசப்பட்டுள்ளன. குடியரசுத் தலைவர் கடற்கரைப் பகுதிக்கு வருவதால் காலை 4 முதல் 7 வரை தினமும் வழக்கமாக நடைப்பயிற்சி மேற்கொள்வோருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

9.15 முதல் 9.45 மணி வரை புதுவையின் முக்கிய பிரமுகர்களை அவர் சந்திக்கிறார். 10.15 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு அரவிந்தர் ஆசிரமம் செல்கிறார். அங்கிருந்து 11.15 மணிக்கு காரில் ஆரோவில் மாத்ரி மந்திருக்கு சென்று பார்வையிடுகிறார். அங்கேயே மதிய உணவை முடித்துவிட்டு 2.45 முதல் 4 மணி வரை நடைபெறும் ஆரோவில் கண்காட்சி, கருத்தரங்கில் பங்கேற்கிறார்.

பின்னர் 4 மணிக்கு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு காரில் லாஸ்பேட்டை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து 4.25 மணிக்கு ஹெலிகாப்டரில் சென்னை புறப்பட்டு செல்கிறார்.

பாதுகாப்பு பணியில் ஆயிரம் போலீஸார்: குடியரசுத்தலைவர் வருகையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 759 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் 250 போக்குவரத்து போலீஸாரும் பணியில் இருப்பார்கள். சென்னை ஆவடி, நெய்வேலியில் இருந்து 200 துணை ராணுவ வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். விமான நிலையம், ஜிப்மர், ஆசிரமம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

குடியரசுத் தலைவர் வருகையையொட்டி தலைமைச்செயலர் ராஜீவ் வர்மா, டிஜிபி சீனிவாஸ், கலெக்டர் வல்லவன் ஆய்வு செய்தனர்.

ட்ரோன்கள், பலூன்கள் 7, 8ம் தேதிகளில் பறக்க விட தடை விதிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் செல்லும் சாலைகளில் சாலையோர கடைகள் முழுவதும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. நகரப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பேனர்கள், கட் அவுட்டுகள் அகற்றப்பட்டுள்ளன. குடியரசுத்தலைவர் வருகையையொட்டி புதுவை நகர சாலைகள் புதுப்பொலிவு பெற தொடங்கி உள்ளது.

அவர் செல்லும் வழியெங்கும் சாலைகள் அழகு படுத்தப்படுகின்றன. சாலையின் நடுவே சென்டர் மீடியனில் உள்ள செடிகள் வெட்டி அழகு படுத்தப்படுகிறது. தடுப்புகளுக்கு வர்ணம் பூசும் பணியும் நடந்துள்ளது. வெங்கடசுப்பா ரெட்டியார் சிலையில் இருந்து முதலியார்பேட்டை வரை 7 இடங்களில் அமைக்கப்பட்டிருந்த வேகத்தடைகள் முற்றிலுமாக இடித்து அகற்றப்பட்டுள்ளன. மேலும் ஆங்காங்கே சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகளும் நடந்துள்ளது. மேலும் போஸ்டர்கள் கிழிக்கப்பட்டுள்ளன.

திரைச்சீலை அமைத்து மூடல்: உப்பனாறு வாய்க்காலில் 15 ஆண்டுகளாக பாலம் கட்டுமானப்பணி ஜவ்வாக நடந்து வருகிறது. இவ்வாய்க்காலும் மோசமான நிலையில் உள்ளது. குடியரசுத்தலைவர் அவ்வழியாக செல்வதால், வாய்க்காலும், நிலுவையிலுள்ள பாலம் கட்டுமானப்பணி தெரியாமல் இருக்க தடுப்புக்கட்டை அமைத்து தீரைச்சீலை போட்டு அதிகாரிகள் மூடியுள்ளனர்.

வாகன சோதனை அதிகரிப்பு: தமிழகத்திலிருந்து புதுச்சேரிக்குள் நுழையும் அனைத்துச் சாலைகளிலும் உள்ள சோதனைச் சாவடிகளில் வாகனச் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள அனைத்து விடுதிகளிலும் தங்குவோரது விவரங்களை தினமும் அந்தந்த விடுதி உரிமையாளர்கள் காவல்துறைக்கு தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் புதுச்சேரியில் செல்லும் சாலைகள் அனைத்திலும் இருபுறமும் தடுப்புக்கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x