

உத்தரப் பிரதேசத்தில் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் பயோ மெட்ரிக்கில் கைரேகை பதிவு செய்யாத பெண்ணுக்கு நியாய விலைக் கடையில் உணவுப் பொருட்கள் வழங்க மறுக்கப்பட்டத்தையடுத்து அப்பெண் பசியால் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் - ரே பரேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சகினா (வயது 50).
உடல் நிலை சரியில்லாத காரணத்தால் சகினாவால் நியாய விலைக் கடைக்கு கணவர் இஷாக் அகமத்துடன் சென்று பயோமெட்ரிக்கில் கைரேகை வைக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இஷாக் அகமதுவின் குடும்ப சூழலை புரிந்து கொள்ளாத நியாய விலைக் கடை அதிகாரிகள் அவரிடம் அவரது மனைவி வந்தால் மட்டுமே உணவு பொருட்களை வழங்க முடியும் என்று கூறியுள்ளனர்.
இந்த நிலையில் குடும்பத்தின் வறுமை சூழலாலும், பசியாலும் சகினா மரணமடைந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அதிகாரி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் ஒருவர் கூறும்போது, "இஷாக் அகமதுவின் குடும்பம் மிக ஏழ்மையான நிலையில் உள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்றார்.
முன்னதாக, கடந்த மாதம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரேஷன் அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்காத குடும்பத்துக்கு அரிசி மறுக்கப்பட்டதால் அக்குடும்பத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமி பசியால் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் உத்தரப் பிரதேசத்தில் மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது.