Published : 01 Nov 2017 10:31 AM
Last Updated : 01 Nov 2017 10:31 AM

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் களமிறங்க பாஜகவில் முஸ்லிம்கள் போட்டா போட்டி

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வேட்பாளராக களமிறங்க முஸ்லிம்கள் போட்டி போடுகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்த போது கடந்த 2011-ம் ஆண்டில் ‘சத்பவனா மிஷன்’ என்ற பெயரில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தார். 2011 செப்டம்பர் 17-ம் தேதி அகமதாபாத்தில் அவர் 3 நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டார். அதன்பிறகு குஜராத் முழுவதும் ஓராண்டாக 36 இடங்களில் உண்ணாவிரதம் இருந்து மத நல்லிணக்கம், அமைதி, வளர்ச்சி ஆகியவற்றை அவர் வலியுறுத்தினர். அவரது உண்ணாவிரத நிகழ்ச்சிகளில் முஸ்லிம்கள் பெரும்திரளாக பங்கேற்றனர்.

கடந்த 2012-ம் ஆண்டில் நடந்த குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத்தப்படவில்லை. எனினும் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வேட்பாளராக களமிறங்க முஸ்லிம்கள் கடும் போட்டி போடுகின்றனர்.

இதுதொடர்பாக பாஜக சிறுபான்மை பிரிவுத் தலைவர் மெகபூப் அலி சிஸ்தி கூறியதாவது:

கடந்த 2015 உள்ளாட்சித் தேர்தலில் பாஜக சார்பில் 350 முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அவர்களில் கணிசமானோர் வெற்றி பெற்றனர். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட ஏராளமான முஸ்லிம்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். எனவே முஸ்லிம்களுக்கு அதிக இடங்களை ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளோம். பாஜக ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் பங்கேற்ற முஸ்லிம்கள் தலைவர்கள், தேர்தலில் போட்டியிட பகிரங்கமாக விருப்பம் தெரிவித்தனர். குறிப்பாக ஜமால்பூர்-காடியா, வாக்ரா, புஜ், அப்தஸா தொகுதிகளில் போட்டியிட ஏராளமான முஸ்லிம்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

குஜராத்தின் ஜபால்பூர்-காடியா தொகுதியின் மக்கள் தொகையில் 61 சதவீதம் பேர் முஸ்லிம்கள். அங்கு பாஜக மூத்த தலைவர் உஸ்மான் போட்டியிட விருப்பம் தெரிவித்திருக்கிறார். அவருக்கு 5 முஸ்லிம் மதக் குருக்கள் இப்போதே ஆதரவு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து உஸ்மான் கூறியபோது, பாஜகவில் 10 ஆண்டுகள் உள்ளேன். எனக்கு வாய்ப்பளித்தால் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்று தெரிவித்தார்.

முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி சயீது கூறியபோது, 9 ஆண்டுகள் பாஜகவில் உள்ளேன். 2010 உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு உள்ளேன். இப்போது சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்புகிறேன் என்றார்.

இவர்களைப் போல ஏராளமான முஸ்லிம்கள் பாஜக வேட்பாளராக போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x