

தேசிய பத்திரிகை தினமான இன்று (நவ.16), ராஜஸ்தானில் இருந்து வெளியாகும் 'ராஜஸ்தான் பத்ரிகா' எனும் செய்தித்தாள் தனது தலையங்கப் பகுதியை வெற்றிடமாக விட்டுள்ளது.
ராஜஸ்தான் அரசு கொண்டுவந்துள்ள கிரிமினல் அவசரச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தலையங்கப் பகுதியைச் சுற்றி கறுப்பு பார்டர் இட்டு வெற்றிடமாக விடப்பட்டுள்ளது.
அவசரச் சட்டம் குறித்து சில தகவல்..
ராஜஸ்தான் அரசு கடந்த செப்டம்பர் 6-ம் தேதி, குற்ற சட்டங்கள் (ராஜஸ்தான் திருத்தம்) அவசர சட்டம் 2017-ஐ பிறப்பித்தது.
இதன்படி, அரசு ஊழியர்கள், நீதிபதிகளுக்கு எதிரான புகார்கள் குறித்து உயர் அதிகாரிகளின் முன் அனுமதி பெறாமல் விசாரிக்க முடியாது. மேலும் இதுகுறித்து ஊடகங்கள் செய்தி வெளியிடவும் முடியாது.
கடும் எதிர்ப்புக்கு நடுவே இந்த அவசர சட்டத்துக்கு மாற்றாக மாநில சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
''மாநில அரசின் அவசர சட்டம், அரசியலமைப்பு சட்டத்தின் 14 (சட்டத்தின் முன் அனைவரும் சமம்) மற்றும் 19(1)(ஏ) (பேச்சு சுதந்திரம்) ஆகிய பிரிவுகளுக்கு எதிராக உள்ளது. எனவே இதை ரத்து செய்ய வேண்டும்'' என பலதரப்பும் எதிர்ப்பு தெரிவித்தது.
'ஆபத்தில் சுதந்திரம்'
இந்நிலையில் இந்த அவசரச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே ராஜஸ்தான் பத்ரிகாவின் இன்றைய பதிப்பில் தலையங்கம் வெற்றிடமாக விடப்பட்டுள்ளது. அதன் மேலே 'கறுப்பு சட்டம் ஒன்று பத்திரிகை சுதந்திரத்தை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
ராஜஸ்தான் பத்ரிகா, ஜெய்ப்பூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. இது குறித்து அப்பத்திரிகையில் தலைமை ஆசிரியர் குலாப் கோதாரி கூறும்போது, "தலையங்கப் பகுதியை வெற்றிடமாக விட்டதன் மூலம் நாங்கள் ராஜஸ்தான் அரசின் அவசரச் சட்டத்தை கடுமையாக எதிர்க்கிறோம். அந்த சட்டம் ஜனநாயகப் படுகொலை" என்றார்.