

மும்பை நகரத்தில் 17 வயது சிறுவனின் வாயில் இருந்து 232 பற்கள் நீக்கப்பட்டுள்ளன.
மருத்துவத் துறையில் மிக அரிதாகக் காணப்படுகிற இந்தக் குறைபாட்டை மருத்துவர்கள் நீக்கியிருப்பதன் மூலம் இந்தச் சிறுவனின் பெயர் தற்போது கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சிறு கிராமத்தில் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார் ஆஷிக் கவாய். இவருக்குச் சிறு வயது முதலே நிறைய பற்கள் வளர்ந்தன. ஒட்டுமொத்தமாக 232 பற்கள் இருந்தன. அதனால் அவரின் வலது பக்க கன்னம் வீங்கிப் போயிருந்தது. இதை ஏதோ புற்றுநோய் என்று நினைத்துக் கொண்டு இவரின் பெற்றோர் மும்பையில் உள்ள ஜே.ஜே. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மருத்துவர்கள் இவரைப் பரிசோதித்துவிட்டு சிகிச்சை அளிக்கத் தொடங்கினர். அதுபற்றி அந்த மருத்துவமனையின் பல் மருத்துவத் துறைத் தலைவர் சுனந்தா திவாரே கூறியதாவது:
இது மிகவும் அரிதான குறைபாடாகும். இவரைப் பரிசோதித்தபோது இவரின் வாயில் பற்களைப் போன்ற சின்னச் சின்ன வடிவங்கள் இருந்தன. அவை மார்பிள் கற்களைப் போன்று கடினமாக இருந்தன. நாங்கள் அவருக்குச் சிகிச்சை அளிக்கும்போது ரத்தத்தில் இருந்து பற்கள் வந்துகொண்டே இருந்தன. அது பார்ப்பதற்குக் கடலில் இருந்து முத்துகள் வெளிப்படுவது போன்றிருந்தது.
சுமார் ஆறு மணி நேரம் நீடித்த இந்தச் சிகிச்சையில் அவரது வாயில் இருந்த கட்டியை நீக்கினோம். இந்தச் சிகிச்சையில் 232 பற்கள் நீக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் இவருக்கு இதுபோன்ற பிரச்னை வராது என நம்புகிறோம் என்று கூறினார்.