

காவிரி பிரச்சினை: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் அவசர கடிதம்: தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடிக்காக காத்திருக்கும் நெற்பயிரைக் காப்பாற்றுவதில் காவிரி டெல்டா விவசாயிகள் எதிர்கொண்டுள்ள இக்கட்டான சூழ்நிலையை எடுத்துரைத்து, காவிரியிலிருந்து உரிய நீரினைத் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், இந்தப் பிரச்சினையில் பிரதமர் நரேந்திர மோடி உடனடியாகத் தலையிட்டு, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ராகுல் காந்தியின் தண்டனையை நிறுத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்: மோடி பெயர் அவதூறு வழக்கில் காங்கிரஸின் முக்கியத் தலைவர் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது மோடி பெயர் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் சூரத் நீதிமன்றம் வழங்கிய தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ராகுல் காந்தியின் கோரிக்கையை குஜராத் உயர் நீதிமன்றம் கடந்த 7-ஆம் தேதி நிராகரித்தது.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மீண்டும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.எஸ்.நரசிம்ஹா மற்றும் சஞ்சய் குமார் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்றம், ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டைனைக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.
இந்த வழக்கு விசாரணையின்போது உச்ச நீதிமன்றம் மூன்று விஷயங்களை அவதானித்தது.அதில், ராகுல் காந்தி பேசியது பேசியது ரசிக்கக் கூடியதாக இல்லை என்பதில் சந்தேகமில்லை. பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் தங்களின் பேச்சுகளில் கவனமாக இருக்க வேண்டும். அவமதிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் அவரது பிரமாணப் பத்திரத்தை ஏற்றுக்கொண்டிருக்கும் நிலையில், ராகுல் தனது பேச்சில் கவனமாக இருந்திருக்க வேண்டும்.
> இந்த வழக்கில் அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதற்கு எந்த விதமான சிறப்புக் காரணத்தையும் விசாரணை நீதிமன்றம் குறிப்பிடவில்லை. தண்டனை 1 வருடம் 11 மாதம் வழங்கப்பட்டிருந்தால் எம்.பி பதவி பறிக்கப்பட்டிருக்காது. இறுதி தீர்ப்பு வரும் வரை அந்த தண்டனை நிறுத்தி வைக்கப்பட வேண்டும்.
> விசாரணை நீதிமன்ற உத்தரவின் பாதிப்பு பெரிய அளவில் உள்ளது. அது ராகுல் காந்தி தனது பொது வாழ்க்கையைத் தொடரும் உரிமையைப் பாதிப்பது மட்டும் இல்லாமல், அவரைத் தேர்ந்தெடுத்த வாக்காளர்களின் உரிமையையும் பாதித்துள்ளது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
“உறுதுணையாக இருந்த நாட்டு மக்களுக்கு நன்றி” - ராகுல் காந்தி: உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சி நடந்திய செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர், "இன்று இல்லை என்றாலும், நாளை இல்லை என்றாலும், என்றாவது ஒரு நாள் உண்மை வென்றே தீரும். எனது இலக்கு எனக்கு தெரியும். நான் என்ன செய்யவேண்டும் என்பதும் எனக்குத் தெரியும். இந்த விவகாரத்தில் உறுதுணையாக நின்ற, எங்களுக்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றி. பொதுமக்கள் காட்டும் அக்கறைக்கும் அன்புக்கும் நன்றி” என்று தெரிவித்தார்.
இதனிடையே இந்த உத்தரவை வரவேற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், "மூன்று விஷயங்களை நீண்ட காலத்துக்கு மறைக்க முடியாது: சூரியன், நிலவு, உண்மை - கவுதம புத்தர்" என்று தெரிவித்துள்ளார். மேலும், நியாயமான தீர்ப்புக்காக உச்ச நீதிமன்றத்துக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், "வாய்மையே வெல்லும்" என்றும் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி பதவி எப்போது?: காங்கிரஸ் தலைவர் கார்கே கூறுகையில், "இது ராகுல் காந்திக்கு கிடைத்த வெற்றி மட்டும் இல்லை. இது இந்திய மக்களுக்கு கிடைத்த வெற்றி. உண்மைக்காவும், நாட்டின் நலனுக்காவும் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடந்து சென்று நாட்டு மக்களைச் சந்தித்துள்ளார். அவர்களின் ஆசிர்வாதங்கள் நம்முடன் உள்ளது. ராகுல் காந்தியை தகுதி இழப்பு செய்வதற்கு 24 மணி நேரமே ஆனது. இனி அவரை பதவியில் மீண்டும் அமர்த்துவதற்கு எத்தனை நாளாகும் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இது மக்களின் வெற்றி, வாக்காளர்களின் வெற்றி, இது வயநாடு மக்களின் வெற்றி" என்று கார்கே தெரிவித்தார்.
ராகுல் தண்டனை நிறுத்திவைப்பு: தலைவர்கள் வரவேற்பு: ராகுல் காந்தி வழக்கில் நீதி வென்றது என்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வியது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் தர்மம் மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறது. இதன்மூலம் மக்களின் குரலாக மக்களவையில் ராகுல் காந்தியின் குரல் மீண்டும் ஒலிக்கப் போகிறது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
“அதானி - மோடி இடையிலான கள்ளக்கூட்டினை நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்தி பேசியதற்கு பழிவாங்கும் நோக்கிலேயே பாஜக இந்த வழக்கை கையில் எடுத்தது. ஆனால், அந்த மமதைக்கு உச்ச நீதிமன்றம் அணைபோட்டுள்ளது. 'இந்தியா' இன்னும் வலிமையோடு எழுந்து நின்று, எதேச்சதிகாரக் கூட்டத்தை வீட்டுக்கு அனுப்பும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
“ராகுல் காந்திக்கு எமது மனமார்ந்த வாழ்த்துகள். நீதித்துறை சங்பரிவார்களையும், அவர்களின் தீங்கான செயல்திட்டங்களையும் அம்பலப்படுத்தியுள்ளது. இது ஜனநாயகத்தின் மகத்தான வெற்றி” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக தென்னை விவசாயிகள் நேரில் சந்தித்து மனு அளித்தனர். இந்தச் சந்திப்பு, தேங்காய், கொப்பரை விலை வீழ்ச்சியை தடுக்கும் முயற்சியாக இச்சந்திப்பு இருந்தது.
இதனிடையே, விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 15 முதல் காலவறையற்ற போராட்டத்தை சென்னையில் தொடங்குவதாக பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.
ரவீந்திரநாத் எம்.பி. வழக்கு தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை: 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், தேனி தொகுதியில் ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என்ற சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மணிப்பூர் ஆயுதக் கிடங்கில் ஆயுதங்கள் சூறை: இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் ரிசர்வ் போலீஸ் படை கிடங்கில் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. 40 வாகனங்களில் வந்த 500 பேர் கொண்ட கும்பல் இந்த ஆயுதக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளது. கடந்த மே 3-ஆம் தேதி தொடங்கி காவல் நிலையங்கள், ஆயுதக் கிடங்குகள் எனப் பல இடங்களில் இனக் குழுக்கள் 4000 ஆயுதங்கள், 5 லட்சம் துப்பாக்கி தோட்டாக்களை சூறையாடி கைப்பற்றிச் சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
கியான்வாபி மசூதியில் ஆய்வைத் தொடங்கிய ஏஎஸ்ஐ: உத்தரப் பிரதேசம், வாரணாசியில் கியான்வாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி வெள்ளிக்கிழமை காலை தொல்லியல் துறை ஆய்வினைத் தொடங்கியது. பாதுகாப்பு கோரி மாவட்ட நிர்வாகத்தின் உதவியை நாடியிருந்த நிலையில் உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதாக ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், அஞ்சுமன் இன்தஜாமியா கமிட்டி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. இன்றைய ஆய்வில் மசூதி தரப்பிலிருந்து யாரும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செந்தில் பாலாஜி வழக்குகள் தீர்ப்புக்காக ஒத்திவைப்பு: இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.