

சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள தென்னிந்திய எம்.பி.க்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். இதில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரை ஆகியோரும் கலந்துகொண்டனர்.
தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா ஆகிய தென் மாநிலங்கள் மற்றும் அந்தமான் - நிக்கோபார், லட்சத்தீவு, புதுச்சேரி ஆகிய யூனியன் பிரதேசங்களை சேர்ந்த தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சி எம்.பி.க்களை பிரதமர் மோடி கடந்த 2-ம் தேதி இரவு டெல்லியில் சந்தித்தார். தமாகா தலைவர் ஜி.கே.வாசன்,அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரை ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.
பின்னர், அவர்களுடன் இணைந்து பிரதமர் இரவு உணவு சாப்பிட்டார். பணியாரம், ஆப்பம், புளியோதரை, பருப்பு குழம்பு, அவியல் ஆகிய தென்னிந்திய உணவு வகைகள் இதில் இடம்பெற்றன.
இந்த சந்திப்பில் பிரதமர் மோடி பேசும்போது, ‘‘மத்திய அரசு கடந்த9 ஆண்டுகளில் ஏழை, எளிய மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை, குறிப்பாக பாஜக ஆட்சியில் இல்லாதமாநிலங்களில், மாநில அரசுகளின்உதவி இன்றி செயல்படுத்தியுள்ளது. இவை தொடர்பான புள்ளிவிவரங்களுடன் கூடிய தகவல்களை முறையாக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். தமிழகம், கேரளா, ஆந்திரா போன்ற பாஜக ஆளாத மாநிலங்களில் மக்களுடன் நெருக்கமாவதற்கு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அவர்களுடன் ஒன்றிணைந்து மதம் சார்ந்த விழாக்களை கொண்டாடவேண்டும்’’ என்று அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. பாஜக தேசிய தலைவர் நட்டா, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஆகியோரும் பங்கேற்றனர்.