Published : 11 Nov 2017 08:47 AM
Last Updated : 11 Nov 2017 08:47 AM

2.5 கோடி வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்திய வம்சாவளி டாக்டர் வி.பி.ஷம்ஷீர் மற்றும் லண்டனில் உள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள் அமைப்பின் தலைவர் நாகேந்தர் சிந்தம் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியாக பொதுநல மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், பொதுத் தேர்தலின்போது, என்ஆர்ஐ-கள் இந்திய தூதரகம் மூலமோ, அஞ்சல் மூலமோ, இணையதளம் வழியாகவோ தங்கள் வாக்குரிமையை செலுத்த அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்த மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இதுகுறித்து பதில் அளிக்குமாறு மத்திய அரசு மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இதில் தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தது.

இந்நிலையில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு இந்த மனுக்கள் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் கூறும்போது, “உலகம் முழுவதும் வசிக்கும் 2.5 கோடிக்கும் அதிகமான வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பிரதிநிதித்துவ வாக்குரிமை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு ஏதுவாக சட்டத்தில் உரிய திருத்தம் செய்யப்படும்” என்றார்.

இதையடுத்து, இந்தப் பணிகளை மேற்கொள்வதற்கு 12 வாரம் அவகாசம் வழங்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x