மணிப்பூர் வழக்கு முதல் கார்கே குற்றச்சாட்டு வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ ஆக.3, 2023

மணிப்பூர் வழக்கு முதல் கார்கே குற்றச்சாட்டு வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ ஆக.3, 2023
Updated on
3 min read

‘ஏறுமுகத்தில் இந்தியா... சரிவில் சீனா’: உலக நாடுகளின் பொருளாதார நிலை குறித்த தரவரிசையை வெளியிட்டுள்ள அமெரிக்க நிதி நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி, இந்தியப் பொருளாதாரம் ஓவர் வெயிட் என்ற நிலையில் உள்ளதாகவும், சீனா சரிவில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

ஓவர்வெயிட் ரேட்டிங் என்பது பொருளாதாரம் சிறப்பாக இயங்கும் என்பதற்கான கணிப்பு. அந்த வகையில் எதிர்காலத்தில் இந்தியப் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும் என்பதால் அதற்கு மோர்கன் ஸ்டான்லி ஓவர்வெயிட் தரம் வழங்கியுள்ளது. இதற்கு இந்திய அரசு பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொண்டதே காரணம் என்று தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், சீனா பொருளாதார சரிவை நோக்கிச் செல்வதாக அந்நிறுவனம் கணித்துள்ளது.

மேகேதாட்டு - தீவிரம் காட்டும் கர்நாடகா: கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டம் மேகேதாட்டுவில் ரூ.9,000 கோடி செலவில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணைகட்ட கர்நாடக அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கான முதல்கட்டதிட்ட வரைவு அறிக்கையை தயாரித்து மத்திய நீர்வளத்துறையிடம் சமர்ப்பித்துள்ளது. அணை கட்டுவதற்கு அனுமதி வழங்குமாறு மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி கோரியுள்ளது.

கர்நாடக அரசின் இந்த முயற்சிக்கு தமிழக அரசும் விவசாய அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேகேதாட்டு திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்கக் கூடாது என மத்திய அரசு மற்றும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிட்டுள்ளது. அதேபோல காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்திலும் மேகேதாட்டு அணை குறித்து விவாதிக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்தப் பின்னணியில், கர்நாடக அரசு மேகேதாட்டுவில் அணை கட்டுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள முடிவெடுத்துள்ளது.

இதுகுறித்து கர்நாடக வனத்துறை அதிகாரி மாலதி பிரியா கூறுகையில், “இந்த அணை ராம்நகர் மற்றும் சாம்ராஜ்நகர் வனப்பகுதியில் அமையவிருக்கிறது. இங்குள்ள மரங்களை கணக்கெடுக்க பந்திப்பூர், மலை மாதேஸ்வரா, பிலிகிரி ரங்கனதிட்டு, காவிரி ஆகிய வன சரணாலயங்களை சேர்ந்த 29 வனத்துறை ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த ஊழியர்கள் வன பயிர்கள், வன உயிர்கள் தொடர்பான ஆய்வையும் மேற்கொள்கின்றனர். இது தவிர நில அளவீடு பணிகளும் தொடங்கப்படும். இந்த ஆய்வுப் பணிகளை 60 நாட்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. வானிலை அனுமதித்தால் குறிப்பிட்ட நாட்களுக்குள் கணக்கெடுப்பை முடிக்க முடியும்” என்றார்.

செந்தில் பாலாஜி உதவியாளர் வீடு இடங்களில் சோதனை: கரூர் - கோவை சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி உதவியாளர் சங்கர் வீடு, செங்குந்தபுரம் பகுதியில் உள்ள ஒரு நிதி நிறுவனம் மற்றும் சின்ன ஆண்டான் கோவில் பகுதியில் உள்ள கிரானைட் தொழிற்சாலை உள்ளிட்ட 5 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனர். சோதனையின்போது மத்திய பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மக்களவையை புறக்கணிக்கிறாரா சபாநாயகர் ஓம் பிர்லா?: அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்யும் உறுப்பினர்களின் செயல்களுக்கு தனது அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் அவை நடவடிக்கைகளை புறக்கணித்ததாக தெரிகிறது.

“மக்களவைக் கூடியதும் நாங்கள் அனைவரும் சபாநாயகரை தலைவர் நாற்காலியில் பார்க்க விரும்புகிறோம். அவைக்கு தலைமையேற்க சபாநாயகர் மீண்டும் வர வேண்டும் என்று நாங்கள் அனைவரும் கோரிக்கை விடுக்கிறோம். மொத்த அவையும் சபாநாயகரை விரும்புகிறது. சபாநாயகரை அவைக்கு தலைமையேற்க மீண்டும் வரச் சொல்லுங்கள். என்ன கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் நாங்கள் அதனை தீர்த்துக் கொள்கிறோம். சபாநாயகர் எங்களின் பாதுகாவலர். அவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நாங்கள் எங்கள் கருத்துகளை அவர் முன்பு தெரிவிப்போம்” என்று மக்களவையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசினார். அப்போது, அவையை வழிநடத்திய ராஜேந்தி அகர்வால், இந்தச் செய்தி சபாநாயகரிடம் உரிய முறையில் தெரிவிக்கப்படும் என்று கூறினார்.

சர்ச்சைப் பேச்சுக்கு சீமான் விளக்கம்: “சாத்தானின் குழந்தைகள் என்று அனைத்து இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களையும் நான் கூறவில்லை” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விளக்கம் அளித்துள்ளார். மேலும், “அவர்களை சாத்தானின் குழந்தைகள் என்று கூறவில்லை. சாத்தானின் குழந்தைகளாக மாறி வீட்டீர்களே என்று ஆதங்கப்படுகிறேன். அநீதிக்கு தொடர்ந்து துணை நின்று கொண்டுள்ளீர்கள். எனக்கு பதில் சொல்ல வேண்டாம். இறைவனுக்கு பதில் கூறியே ஆக வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

அமைச்சர்கள் மீது அண்ணாமலை குற்றச்சாட்டு: 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஆலங்குடியில் மக்களை சந்தித்தார். இது குறித்து அவர் கூறும்போது, “தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்ற துறை அமைச்சர் சிவ.மெய்யநாதனும், சட்டத் துறை அமைச்சர் ரகுபதியும் தொகுதி மக்களுக்காக இதுவரை ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போடவில்லை” என்று அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளாா்.

கார்கே குற்றச்சாட்டும், ஜெக்தீப் தன்கர் பதிலும்: "நான் யாரையும் பாதுகாக்க வேண்டிய தேவை இல்லை, நான் அரசியலமைப்பை பாதுகாக்கவே இங்கே இருக்கிறேன்" என்று மாநிலங்களவைத் தலைவரும், துணைக் குடியரசுத் தலைவருமான ஜெக்தீப் தன்கர் தெரிவித்தார். மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் குற்றச்சாட்டினைத் தொடர்ந்து, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். முன்னதாக, மாநிலங்களவையில் பேசிய கார்கே,"நீங்கள் சின்ன சின்ன விஷயங்களைக் கூட அனுமதிக்க மறுக்கிறீர்கள். நீங்கள் பிரதமரைப் பாதுகாக்க முயற்சிக்கிறீர்கள். ஏன் என்றுதான் புரியவில்லை" என்று தெரிவித்தார்.

‘மாஸ் நல்லடக்க’ முடிவை தள்ளிவைத்த பழங்குடியினர்: மணிப்பூர் வன்முறையில் பலியான குகி ஸோ இனத்தைச் சேர்ந்த 35 பேரை ஒரே இடத்தில் நல்லடக்கம் செய்யும் ஐடிஎல்எஃப் அமைப்பின் முடிவை எதிர்த்து கோகோமி அமைப்பு மணிப்பூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கினை அதிகாலை 6 மணிக்கு உயர் நீதிமன்றம் விசாரித்தது. இதனையடுத்து ஐடிஎல்எஃப் அமைப்பு நல்லடக்க நிகழ்வை 5 நாட்களுக்கு ஒத்திவைப்பதாகத் தெரிவித்தது.

மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் அமைச்சக கோரிக்கையை ஏற்று இந்த அறிவிப்பை வெளியிடுவதாகத் தெரிவித்தது. மேலும், இன்னும் 5 நாட்களில் எங்களுக்கான நிலம் ஒதுக்கீடு செய்யப்படாவிட்டால் நாங்கள் திட்டமிட்டபடி நல்லடக்க நிகழ்வை நடத்துவோம் என்று தெரிவித்துள்ளது.

கியான்வாபி மசூதியில் ஆய்வுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி: வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதியில் தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வைத் தொடர அலகாபாத் உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. முஸ்லிம் பிரதிநிதிகள் தரப்பில், கியான்வாபி மசூதியில் ஆய்வு மேற்கொண்டால் அது கட்டமைப்புக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்று வைக்கப்பட்ட வாதம் தள்ளுபடி செய்யப்பட்டது. நீதியை நிலைநாட்ட அறிவியல்பூர்வ ஆய்வு தேவைப்படுகிறது என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்து தொல்லியல் துறை ஆய்வைத் தொடர அனுமதி அளித்துள்ளது.

‘பாரத மாதா வாஹினி’ தலைவர் கைது: ஆத்திரமூட்டும் காட்சிப் பதிவுகளை சமூக வலைதளங்களில் பரப்புவோர் மீது ஹரியாணா போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த வகையில், இந்துத்துவா அமைப்பான ‘பாரத மாதா வாஹினி’ தலைவர் தினேஷ் பாரதி கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in