

புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த மாதம் 20-ம் தேதி தொடங்கியது. அன்றிலிருந்தே மணிப்பூர் வன்முறை தொடர்பாக அவையில் பிரதமர் பதில் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளும் கட்சி எம்.பிக்களும் அவையில் கூச்சலிடுகின்றனர். இது நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு நாளும் தொடர் கதையாக நடைபெற்று அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்படுகின்றன.
பிரதமர் மோடியை பதில் அளிக்க வைப்பதற்கு, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் 8-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. அப்படியிருந்தும் நாடாளுமன்றத்தில் அமைதி நிலவவில்லை.
மக்களவையில் நேற்று காலை தொடங்கியபோது சபாநாயகர் இருக்கையில் ஓம் பிர்லா இல்லை. பாஜக உறுப்பினர் கிரித் சோலங்கி மக்களவையை நடத்தினார். மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும் என கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அவர்களை அமைதி காக்கும் படி அவையை நடத்திய கிரித் சோலங்கி கூறினார். ஆனால் அமளி தொடர்ந்ததால் அவை முதலில் மதியம் 2 மணி வரையும், பின்பு நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
மக்களவையில் நேற்று முன்தினம் மசோதாக்களை நிறைவேற்றிய போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் நடந்து கொண்ட விதம் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாகவும், உறுப்பினர்கள் கண்ணியத்துடன் நடந்து கொள்ளும்வரை மக்களவை கூட்டத்தில் கலந்து கொள்ளப்போவதில்லை என அவர் கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி அரசுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்த சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் நேற்று நிறைவேற்ற திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அவை ஒத்திவைப்பு காரணமாக இந்த மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை.