

புதுடெல்லி: மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசுமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் சொல்லுங்கள் என குடியரசுத் தலைவரிடம் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தி உள்ளனர்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. இதில் மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி அறிக்கை தாக்கல் செய்ய வலியுறுத்தி எதிர்க்கட்சிகளின் ‘இண்டியா’ கூட்டணி கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஜூலை 26-ம் தேதி மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தி, இண்டியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் உறுப்பினர் கவுரவ் கோகோய் நோட்டீஸ் வழங்கினார். இதன் மீது வரும் 8-ம் தேதி விவாதம் நடைபெற உள்ளது.
இதற்கிடையே, ‘இண்டியா’ கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் குழுவினர் கடந்த வாரம் மணிப்பூர் சென்று, கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து அவர்களின் கருத்துகளை கேட்டனர்.
இந்நிலையில், குடியரசுத் தலைவர்திரவுபதி முர்முவை மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட 31 எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் நேற்று சந்தித்து, ஒரு மனு கொடுத்தனர். பின்னர், செய்தியாளர்களிடம் கார்கே கூறியதாவது:
மணிப்பூரில் கடந்த 3 மாதங்களாக கலவரம் நடந்து வருகிறது. இதில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 5 ஆயிரம் வீடுகள் சேதம் அடைந்துள்ளன. 2 பெண்கள் ஆடையின்றி ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி உள்ளது. ஆனால், கலவரத்தை கட்டுப்படுத்த மணிப்பூர் அரசும் மத்திய அரசும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே, இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு பிரதமர் மோடியை வலியுறுத்த வேண்டும் என முர்முவிடம் கோரிக்கை வைத்துள்ளோம். கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்த பிரதமர் அங்கு செல்ல வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம். மணிப்பூர் மாநிலத்தின் இரு சமுதாய பிரிவை சேர்ந்த2 பெண்களை மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி உள்ளோம்.
பிரதமர் அலுவலகத்தில் இருந்து சுமார் 100 கி.மீ. தொலைவில் உள்ள ஹரியாணா மாநிலம் நூ பகுதியில்மத ரீதியிலான மோதல் ஏற்பட்டுள்ளது. ஆனால், இதுபற்றி மத்திய அரசு கவலைப்படவில்லை. எனவே, ஹரியாணாவில் கலவரம் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
4 நாள் பயணமாக தமிழகம் வருகிறார் முர்மு
மைசூருவில் இருந்து, 5-ம் தேதி இரவு 7 மணிக்கு விமானத்தில் சென்னை வருகிறார். விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் மற்றும் உயர் அதிகாரிகள் அவரை வரவேற்கின்றனர். அன்று ஆளுநர் மாளிகையில் அவர் தங்குகிறார். ஆக.6-ம் தேதி காலை 10.30 மணிக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் விவேகானந்தா அரங்கில் சென்னை பல்கலைக்கழகத்தின் 165-வது பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. அதில் பங்கேற்று, பட்டங்களை வழங்கி உரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சியில் ஆளுநர், முதல்வர், உயர்கல்வி அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
பிறகு, மீண்டும் ஆளுநர் மாளிகைக்கு திரும்புகிறார். அங்குள்ள ஆளுநர் மாளிகை தர்பார் அரங்குக்கு ‘பாரதியார் அரங்கம்’ என்று பெயர் சூட்டும் விழா மாலை 7 மணிக்கு நடைபெறுகிறது. அதில் பங்கேற்று பெயர் பலகையை திறந்து வைக்கிறார். இந்த விழாவில் தமிழ் அறிஞர்கள், பழங்குடியின மக்கள் பங்கேற்கின்றனர். 7-ம் தேதி காலை புதுச்சேரிக்கு சென்று, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். 8-ம் தேதி காலை சென்னை வந்து, விமானத்தில் டெல்லி திரும்புகிறார். குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.