கட்கரி வீட்டில் ஒட்டுகேட்கும் கருவி விசாரணைக்கு உத்தரவிட காங். கோரிக்கை

கட்கரி வீட்டில் ஒட்டுகேட்கும் கருவி விசாரணைக்கு உத்தரவிட காங். கோரிக்கை
Updated on
1 min read

மத்திய தரைவழிப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியின் வீட்டில் ஒட்டுகேட்கும் கருவி காணப்பட்டதாக கூறப்படுவது குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் அதிகாரப்பூர்வ இல்லம், டெல்லி தீன்மூர்த்தி சாலையில் உள்ளது.

இந்த வீட்டின் படுக்கை அறையில் ஒட்டுகேட்கும் கருவி காணப்பட்டதாகவும், இது தொடர்பாக நிபுணர் குழுவினர் ஆய்வு நடத்தியதாகவும் ஊடகங் களில் செய்தி வெளியாகின.

இது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்கவேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்தவேண்டும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் வலியுறுத்தினார்.

இந்நிலையில் நிதின் கட்கரி தனது ட்விட்டர் பக்கத்தில், “என் வீட்டில் எந்த ஒட்டுகேட்பு கருவியும் இல்லை. இத்தகவல் ஊக அடிப்படையிலானது என்று நான் ஏற்கெனவே கூறிவிட்டேன். அதையே இப்போது மீண்டும் வலியுறுத்துகிறேன்” என திங்கள்கிழமை பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம், “இந்த விவகாரம் குறித்து உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்துமா என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு ராஜ்நாத், “கட்கரியே இந்தப் புகாரை மறுத்துவிட்ட பிறகு அதில் சொல்வதற்கு வேறொன்றும் இல்லை” என்றார்.

மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரன் ரிஜிஜுவும் இதே பதிலையே அளித்தார். “இந்தத் தகவல் முற்றிலும் ஊக அடிப்படையிலானது என்று நிதின் கட்கரியே கூறிவிட்ட நிலையில் இந்த விவகாரம் பற்றி பேசுவது பொருத்தமற்றது” என்றார் அவர்.

இந்நிலையில் கட்கரியின் மறுப்பை ஏற்காத காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக் விஜய் சிங், “இது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினை என்பதால் புலனாய்வு அமைப்பு மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்றார்.

இதே கோரிக்கையை முன்னாள் வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித்தும் வலியுறுத்தினார்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி கூறும்போது, “இதுபோன்ற சம்பவங்களில் இருந்து பாதுகாத் துக்கொள்வதற்கான, சட்ட நடைமுறைகளை மக்களுக்கு அரசு விளக்க வேண்டும்” என்றார்.

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் இந்தக் கருவி பொருத்தப்பட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டை மறுத்த மணீஷ் திவாரி, “தேசிய ஜனநாயக கூட்டணி தற்போது ஆட்சி அதிகாரத்தில் உள்ளது. எனவே இந்த சம்பவம் தொடர்பான அனைத்து விவரங்களையும் மக்களுக்கு அளிக்க வேண்டும்” என்றார்.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் தாரிக் அன்வர் கூறும்போது, “இந்த சம்பவத்தின் உண்மை தன்மை குறித்து நாடாளுமன்றத்தில் அரசு அறிக்கை அளிக்க வேண்டும். இதில் பிரதமர் அலுவலகத்துக்கோ அல்லது பிற வெளிநாட்டு சக்திகளுக்கோ தொடர்பு உள்ளதா என தெரிவிக்க வேண்டும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in