

பிஹார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு அம்பு சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது பிஹார் அரசியலில் ஷரத் யாதவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
ஐக்கிய ஜனதா தளம், லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் மெகா கூட்டணி அமைத்து பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றது. நிதிஷ் குமார் முதல்வராகவும் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் அம்மாநில துணை முதல்வராகவும் இருந்தனர். இந்நிலையில், தேஜஸ்வி மீது ஊழல் புகார் எழுந்துள்ளதால் தேஜஸ்வி பதவி விலக வேண்டும் என நிதிஷ் குமார் வலியுறுத்தினார். இதனால், கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டது. இந்நிலையில், மெகா கூட்டணியில் இருந்து நிதிஷ் குமார் விலகினார். ஆனால், அடுத்த நாளே பாஜக ஆதரவோடு மீண்டும் முதல்வரானார்.
பாஜகவுடன் ஐக்கிய ஜனதா தளம் கூட்டு சேர்ந்தமைக்கு கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பியது. ஐக்கிய ஜனதா தள கட்சியின் முக்கிய தலைவரான ஷரத் யாதவ் சரமாரியாக விமர்சனங்களை முன்வைத்தார். நிதிஷ் குமார், வாக்களித்த மக்களை ஏமாற்றிவிட்டதாகக் கூறினார். கட்சியின் விதிகளை மீறி பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக நிதிஷ் குமார் மீது குற்றஞ்சாட்டினார்.
இதனால், ஐக்கிய ஜனதா தள கட்சிக்குள் பிளவு ஏற்பட்டது. ஷரத் யாதவ் தரப்பிலிருந்து சோட்டுபாய் அமர்சங் வசவா தேர்தல் ஆணையத்தை அனுகினார். கட்சியின் அம்பு சின்னம் தங்களுக்கானதே என உரிமை கோரினார். இதனை எதிர்த்து நிதிஷ் குமார் தரப்பிலும் தேர்தல் ஆணையத்தில் முறையிடப்பட்டது.
இந்நிலையில், நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள கட்சிக்கே பெரும்பான்மை ஆதரவு இருப்பதால் நிதிஷ் தரப்புக்கே அம்பு சின்னத்தை பயன்படுத்தும் அதிகாரம் இருக்கிறது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.