Published : 07 Nov 2017 06:47 PM
Last Updated : 07 Nov 2017 06:47 PM

டெல்லி அரசுக்கும் துணைநிலை ஆளுநருக்குமான கருத்து வேறுபாடு திட்டமிட்டதாக இருத்தல் கூடாது: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

டெல்லி அரசின் ஒவ்வொரு முடிவுக்கும் திட்டத்துக்கும் துணைநிலை ஆளுநர் கருத்து வேறுபாடு கொள்ள முடியாது. வேறுபட அவருக்கு அதிகாரம் இருந்தாலும் அது அற்பத்தனமான விஷயங்களுக்காகவோ, திட்டமிட்டதாகவோ இருத்தல் கூடாது மாறாக விஷயகனம் உள்ளதாக இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

மத்திய அரசுக்கும் டெல்லி மாநில ஆம் ஆத்மி அரசுக்கும் இடையிலான அதிகார மோதல் குறித்த அரசியல் சாசன அமர்வின் முன் செவ்வாயன்று முழுநேர விசாரணை நடைபெற்றது.

டெல்லி அரசின் உதவி மற்றும் ஆலோசனைகள் துஷ்பிரயோகமாக இல்லாதபட்சத்தில் மதிக்கப்பட வேண்டும், ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வாய்மொழியாக கருத்து தெரிவித்துள்ளார்.

“துணைநிலை ஆளுநர் தலையீடு மோதல் போக்காக இருக்க வேண்டிய அவசியமில்லை. புறவயமான அளவுகோல்களின்படி அது பிரச்சினை தொடர்பானதாக இருக்க வேண்டும்” என்றார் தீபக் மிஸ்ரா. அரசியல் சட்டம் 239ஏஏ பிரிவின் கீழ் ஒத்திசைவான நிர்வாகத்துக்கும், குடிமக்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமாகவும் துணைநிலை ஆளுநர் தனது அரசியலமைப்புக் கடமைகளை ஆற்ற வேண்டும்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மற்றொரு நீதிபதி சந்திராசூட், “நிர்வாகத்துக்கு மாற்றாக துணைநிலை ஆளுநர் இருக்க முடியாது” என்றார்.

நீதிபதி அசோக் பூஷணும், “ஒட்டுமொத்த அமைச்சகம் எடுக்கும் முடிவுகளுக்கும் திட்டங்களுக்கும் ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் துணைநிலை ஆளுநரின் ஒப்புதல் பெற வேண்டும் என்பது தேவையற்றது” என்றார்.

என்னென்ன விஷயங்களில் துணைநிலை ஆளுநர் வித்தியாசப்பட முடியும் என்று கேள்வி எழுப்பிய தீபக் மிஸ்ரா, கருத்து வேறுபாடுகள் இன்னின்ன அளவுகோல்களில்தான் இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் கருதுகோளாக முன் வைக்க விரும்பவில்லை என்றார்.

டெல்லி அரசுக்காக வாதாடும் கோபால் சுப்பிரமணியம், “கண்ணுக்குத் தெரியும் அதிகார துஷ்பிரயோகங்களை கண்டுணர்ந்தால் துணைநிலை ஆளுநர் தலையிடலாம்” என்றார். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களில் டெல்லி அரசின் முடிவுகள் சர்ச்சைக்குரியதாக இருந்தால் துணை நிலை ஆளுநர் தலையிடலாம் என்றார் அவர் மேலும். ஆனால் இப்போதோ ஒவ்வொரு அரசின் நடவடிக்கையிலும் துணை நிலை ஆளுநர் தலையீடு இருந்து வருகிறது என்றார்.

சாதாரண பணி நியமனங்களிலெல்லாம் அவர் தலையிடுகிறார், மேலும் சில கோப்புகள் ஓராண்டுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளன என்று கோபால் சுப்பிரமணியம் தன் வாதத்தை முன் வைத்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் நாட்டின் தலைநகர் விவகாரத்தில் நாடாளுமன்றத்துக்கு சட்டமியற்றும் அதிகாரங்கள் பற்றி கேள்வியில்லை ஆனால், ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தன் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் தொந்தரவு இருக்கக் கூடாது என்றார் கோபால் சுப்பிரமணியம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x