

வியாழக்கிழமை தேசிய பத்திரிகை தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பத்திரிகையாளர்களுக்கு தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.
மேலும் அவரது அரசாங்கம் பத்திரிகை சுதந்திரத்தையும், கருத்து சுதந்திரத்தையும் நிலை நாட்ட உறுதி கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
முக்கிய தினங்களில் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவிக்கும் பிரதமர் மோடி, வியாழக்கிழமை அன்று தேசிய பத்திரிகை தினத்துக்கான தனது வாழ்த்தை பதிவேற்றினார். அவரது ட்வீட்டுகளின் தமிழ் திரட்டு பின்வருமாறு.
"ஊடகத்தில் இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் தேசிய பத்திரிகை தினத்தில் எனது வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் கடின உழைப்பை நான் மெச்சுகிறேன். குறிப்பாக ஓய்வின்றி களத்தில் உழைத்து, நாட்டை, உலகை வடிவமைக்கும் செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பத்திரிகையாளர்கள், காணொலி பதிவாளர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.
குரலற்றவர்களுக்காக குரல் எழுப்பும் ஊடகத்தின் பங்கு பாராட்டுக்குரியது. கடந்த 3 வருடங்களில், தூய்மை இந்திய திட்டத்துக்கு ஊடகங்கள் பெரிய வலுவை சேர்த்துள்ளன. தூய்மை செய்தியை திறம்பட இன்னும் பலருக்கு கொண்டு சேர்த்துள்ளன. சமூக ஊடகமும், மொபைல்கள் மூலம் செய்திகளைப் பார்ப்பதும் தற்போது அதிகரித்துள்ளது.
இந்த முன்னேற்றங்கள் ஊடகத்தின் தாக்கத்தை இன்னும் அதிகரிக்கும் என நான் உறுதியாக நினைக்கிறேன். அது ஊடக வெளியை இன்னும் ஜனநாயகமயமாக்கி, பங்கேற்புரீதியில் மாற்றும் என நம்புகிறேன். சுதந்திரமான பத்திரிகையே துடிப்பான ஜனநாயகத்துக்கான மைல்கல்.
நமது ஊடக வெளியை பயன்படுத்தி, 125 கோடி இந்தியர்களின் திறமை, பலம், படைப்பாற்றல் ஆகியவற்றை காட்டுவோம்.
மத்திய அரசு பத்திரிகை சுதந்திரத்தையும், கருத்து சுதந்திரத்தையும் நிலை நாட்ட உறுதி கொண்டுள்ளது"
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.