Published : 04 Jul 2014 12:04 PM
Last Updated : 04 Jul 2014 12:04 PM

ஜம்மு வளர்ச்சி ஒருபோதும் பாதிக்கப்படாது: புதிய ரயில் சேவையை தொடங்கிவைத்த பிரதமர் மோடி உறுதி

ஜம்மு வளர்ச்சி ஒருபோதும் பாதிக்கப்படாது என, கத்ரா - உதம்பூர் ரயில் சேவையை தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் மோடி தெரிவித்தார்.

பிரதமராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக ஜம்மு - காஷ்மீர் வந்துள்ளார் நரேந்திர மோடி.

முன்னதாக இன்று காலை, ஜம்மு விமான நிலையத்திற்கு சிறப்பு விமானம் மூலம் வந்தடைந்த அவரை ஆளுநர் என்.என்.வோரா, முதல்வர் ஒமர் அப்துல்லா, மாநில உயர்கல்வி அமைச்சர் முகமது அக்பர் லோன், மாநில தலைமைச் செயலர் முகமது இக்பால் காண்டே ஆகியோர் வரவேற்றனர். அங்கிருந்து சிற்ப்பு ஹெலிகாப்டர் மூலம் கத்ராவுக்குச் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி.

கத்ரா - உதம்பூர் ரயில் சேவை:

கத்ரா - உதம்பூர் இடையே அமைக்கப்பட்டுள்ள ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைத்தார். கத்ராவில் இருந்து 25 கி,மீ. தொலைவில் உள்ள மாதா வைஷ்ணோ தேவி கோயிலுக்குச் செல்கிறது இந்த ரயில்.

இந்நிகழ்ச்சியின் போது ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா, பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திரா சிங் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

ஜம்மு வளர்ச்சி பாதிக்கப்படாது:

ரயில் சேவையை துவக்கி வைத்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "ரூ.1,150 கோடி செலவில் இந்த ரயில் சேவை உருவாகி உள்ளது. இதன்மூலம் சாமான்ய மக்களும் வைஷ்ணோ தேவி கோவிலுக்கு புனிதப்பயணம் மேற்கொள்ளும் வசதி கிடைக்கிறது.

ஜம்மு - கத்ரா ரயில் சேவைக்கு ஸ்ரீசக்தி எக்ஸ்பிரஸ் என பெயரிடலாம். ஜம்மு - காஷ்மீரில் மேலும் பல புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படும். ரயில்வே துறையில் சூரியஒளி மின்சக்தி அதிக அளவில் பயன்படுத்தப்படும்.

ஜம்மு வளர்ச்சி ஒருபோதும், எவ்வகையிலும் பாதிக்கப்படாது. வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தவர் ஒவ்வொருவர் மனதையும் வெற்றி கொள்ள வேண்டும் என்பதே எங்களது இலக்கு.

இம்மாநிலம் ஏற்கெனவே நிறைய பிரச்சினைகளை சந்தித்துவிட்டது. இனி இங்கு வளர்ச்சியும், அமைதியும் நிலைத்திட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்" என்றார்.

பாதுகாப்பு:

பிரதமர் நரேந்திர மோடி வருகையை ஒட்டி மாநிலம் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கிடையில், மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரிவினைவாத அமைப்புகள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x