Last Updated : 01 Nov, 2017 05:30 PM

 

Published : 01 Nov 2017 05:30 PM
Last Updated : 01 Nov 2017 05:30 PM

எளிதாக தொழில் புரிய வாய்ப்புள்ள நாடுகள் பட்டியலில் 100-வது இடம்: என்ன சொல்கிறார் பொருளாதார நிபுணர்?

உலகில் எளிதாக தொழில்புரிவதற்கான நாடுகளின் பட்டியலை உலக வங்கி வெளியிட்டு வருகிறது. சிறுமுதலீட்டாளர்கள் பாதுகாப்பு, மின்சாரம், கடன் கிடைப்பது உள்ளிட்ட 10 காரணிகளை அடிப்படையாக வைத்து இந்த குறியீட்டினை உலக வங்கி தயாரிக்கிறது.

கடந்த ஆண்டு ஜூன் 2 முதல் இந்த ஆண்டு ஜூன் 1-ம் தேதி வரையிலான காலம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த பட்டியலில் முதல் முறையாக இந்தியா 100-வது இடத்தைப் பிடித்திருக்கிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 30 இடங்கள் இந்தியா முன்னேறி இருக்கிறது. புதிதாக தொழில் தொடங்குவது மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான வர்த்தகத்தையும் இந்தியா எளிமைப்படுத்தி வருவதாக உலக வங்கி கூறியுள்ளது.

இந்தியாவில் முதலீடு செய்பவர்களுக்கு உலக வங்கியின் இந்த அறிக்கை ஊக்கமாக அமையும் என கருதப்படுகிறது.

பொருளாதார நிபுணர் சோம. வள்ளியப்பனிடம் இதுபற்றி கேட்டோம்.

அவர் கூறுகையில் ''உலக வங்கியின் அறிக்கை என்பது இந்தியாவில் உள்ள சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை பற்றியது அல்ல. வெளிநாடுகளில் இருந்து முதலீடு செய்யும் பெரு நிறுவனங்களை பற்றியது தான்.

பெரிய நிறுவனங்கள் அதில் முதலீடு செய்யும் பெரிய முதலீட்டாளர்களை பற்றியே அதிகம் கவலைப்படும். சிறிய முதலீட்டாளர்களை பற்றிய கவனம் குறைவாகவே இருக்கும். இதையடுத்து, சிறு முதலீட்டாளர்களையும் பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது.

ஜிஎஸ்டியின் மூலம் மத்திய அரசின் வரி வசூல் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. இதுபோன்ற காரணங்களால், இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கான சூழல் எளிதாகி இருப்பதாக உலக வங்கியின் அறிக்கை கருதுகிறது.

அதேசமயம் கட்டிட அனுமதி, பத்திரப்பதிவு, மின் இணைப்பு உட்பட நான்கு அளவுகோலில் இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கான சூழல் இன்னமும் கடினமாக இருப்பதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

எளிமையாக தொழில் தொடங்குவதற்கான உலக வங்கியின் பட்டியலில், 2020-ம் ஆண்டில் முதல் 30 இடங்களுக்குள் வந்துவிட வேண்டும் என்ற இலக்குடன் மத்திய அரசு செயல்படுகிறது. தற்போது 100 இடத்தைப் பிடித்து இருப்பது இதற்கு முன்னோட்டமாக மத்திய அரசு பார்க்கிறது'' என சோம.வள்ளியப்பன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x