டெல்லி உயர் அதிகாரிகளை கட்டுப்படுத்தும் மசோதா மக்களவையில் தாக்கல்: கூட்டாட்சி மீதான தாக்குதல் என எதிர்க்கட்சிகள் விமர்சனம்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்லியில் உள்ள அரசு அதிகாரிகளின் பதவிக்காலம், ஊதியம் மற்றும் இடமாற்றம் அல்லது பதவி உயர்வு தொடர்பான விஷயங்களில் விதிகளை உருவாக்க மத்திய அரசுக்கு அதிக அதிகாரம் உள்ளது என நிலைநாட்ட ஒரு சட்டம் கொண்டு வர மத்திய அரசு முயற்சித்து வந்தது.

அதன்படி டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இச்சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் அதிகாரிகள் மீதான எந்த நடவடிக்கை அல்லது விசாரணை குறித்தும் முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசின் வசம் இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.

ஆனால், இத்தகைய ஒரு சட்டம் வருவதை டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சி தீவிரமாக எதிர்த்தது. இதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் தோற்கடிக்க பல கட்சிகளின் ஆதரவையும் அக்கட்சி நாடி வந்தது.

இந்நிலையில் அவசர சட்டத்துக்கு மாற்றாக உருவாக்கப்பட்ட டெல்லி சேவைகள் மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

மேலும் இது கூட்டாட்சி அமைப்புகள் மீதான தாக்குதல் என்று எதிர்க்கட்சிகள் வர்ணித்துள்ளன.

சட்டத்திருத்த மசோதா- 2023 என்ற இந்த மசோதாவை உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் அறிமுகம் செய்து பேசினார். இதுகுறித்து மக்களவையில் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறும் போது, “டெல்லி மாநிலத்துக்காக நாடாளுமன்றம் சட்டங்களை உருவாக்கலாம் என அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. சட்டம் உருவாக்கவும் அனுமதிக்கிறது. இந்த டெல்லி சேவைகள் மசோதாவுக்கு எதிரான கருத்துகள் எந்த அடிப்படையும் இல்லாத அரசியல்" என்றார்.

இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன்சவுத்ரி கூறும்போது, “இந்த மசோதாவைத் தாக்கல் செய்திருப்பது கூட்டாட்சி ஒத்துழைப்பு என்ற கருத்தை மீறுவதாக இருக்கிறது. மேலும், இது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது. இந்த மசோதா டெல்லி துணைநிலை ஆளுநரின் அதிகாரத்தை மேலும் அதிகரிக்கும். கூட்டாட்சி அமைப்பு மீதான தாக்குதலாக இது உள்ளது" என்றார்.

ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி.ராகவ் சத்தா கூறும்போது, “முன்பு கொண்டு வந்த அவசரச் சட்டத்தையும் விட மோசமானதாக இந்த மசோதா அமைந்துள்ளது. இது ஜனநாயகம், அரசியலமைப்புச் சட்டம், டெல்லி மக்களுக்கு எதிராகவே அமைந்துள்ளது" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in