புவி சுற்றுப்பாதையில் இருந்து விலகி நிலவை நோக்கி பயணம் தொடங்கிய சந்திரயான்-3: இஸ்ரோவின் முக்கிய பணி வெற்றி

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: சந்திரயான்-3 விண்கலம் தனது புவி சுற்றுப்பாதை பயணத்தை நிறைவு செய்து, நிலவை நோக்கி செல்ல தொடங்கியுள்ளது. சரியான பாதையில், எதிர்பார்த்ததைவிட சீரான வேகத்தில் விண்கலம் பயணிக்கிறது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ரூ.615 கோடியில் வடிவமைத்தது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் ஏவுதளத்தில் இருந்துஎல்விஎம்-3 ராக்கெட் மூலம் இந்த விண்கலம் கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து, பெங்களூருவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விண்கலத்தை இயக்கும் பணி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில், சந்திரயான்-3 விண்கலத்தை நிலவுக்கு நெருக்கமாக கொண்டு செல்ல ஏதுவாக, அதில் உள்ளஉந்துவிசை இயந்திரங்கள் இயக்கப்பட்டு,அதன் புவி நீள்வட்ட சுற்றுப்பாதை தூரம்படிப்படியாக அதிகரிக்கப்பட்டது.

இதன்மூலம் குறைந்தபட்சம் 236 கி.மீ. தூரம், அதிகபட்சம் 1 லட்சத்து 27,609 கி.மீ. தூரம் கொண்ட புவி சுற்றுப்பாதைக்கு விண்கலம் கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து, விண்கலத்தை புவி நீள்வட்ட சுற்றுப்பாதையில் இருந்து விலக்கி, நிலவின் ஈர்ப்புவிசை பகுதிக்குள் செலுத்தும் முயற்சி நேற்று முன்தினம் (ஜூலை 31) நள்ளிரவு 12.05 மணி அளவில் மேற்கொள்ளப்பட்டது.

மிகவும் சிக்கலான இப்பணியை முடித்து, சந்திரயான்-3 விண்கலம், வெற்றிகரமாக நிலவின் ஈர்ப்புவிசை பகுதிக்குள் உந்தி தள்ளப்பட்டது.

இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் சிலர் கூறியதாவது:

சந்திரயான்-3 விண்கலம் புவியின் நீள்வட்டப் பாதையில் தனது பயணத்தை நிறைவு செய்து, தற்போது நிலவை நோக்கி பயணித்து வருகிறது. சரியான பாதையில், எதிர்பார்த்ததைவிட சீரான வேகத்தில் செல்கிறது. அடுத்தகட்டமாக ஆக.5-ம் தேதி நிலவின் சுற்றுப்பாதைக்குள் விண்கலத்தை உந்தி தள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்பிறகு, விண்கலத்தின் உயரம்படிப்படியாக குறைக்கப்பட்டு, திட்டமிட்டபடி நிலவில் ஆக.23-ம் தேதி மிக மெதுவாக தரையிறக்கப்படும்.

சுற்றுப்பாதை மாற்றம் என்பது சந்திரயான்-3 விண்கல பயணத்தின் முக்கிய பணிகளில் ஒன்றாகும். அது நல்லபடியாக முடிந்துள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in