Published : 25 Jul 2014 04:36 PM
Last Updated : 25 Jul 2014 04:36 PM

தெலங்கானா விபத்து: இறந்ததாக கருதப்பட்ட சிறுவன் பிறந்தநாளில் மீண்ட நிகழ்வு

தெலங்கானா ரயில் விபத்தில் பள்ளிக் குழந்தைகள் 17 பேர் பலியான சம்பவம் நாட்டையே துக்கத்தில் ஆழ்த்திய நிலையில், இறந்ததாக கருதப்பட்ட சிறுவன் உயிருடன் இருப்பது சற்றே ஆறுதல் தரும் விஷயமாக அமைந்துள்ளது.

தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் ஆளில்லா ரயில்வே லெவல் கிராசிங்கை கடக்க முயன்ற பள்ளிப் பேருந்து நேற்று (வியாழக்கிழமை) விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் தனது மகன் தர்ஷன் கவுட் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது சுவாமி கவுடை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

நடந்த சம்பவத்தை நம்ப முடியாமல், உடலை சரிவர அடையாளம் காண முடியாமல் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட ஒரு சிறுவனின் உடலை கனத்த மனதுடன் கையெழுத்திட்டுப் பெற்றுச் சென்றிருக்கிறார் சுவாமி கவுட். அந்தச் சிறுவனின் சடலத்திற்கு முறைப்படி இறுதிச் சடங்குகளையும் நிறைவேற்றியுள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்த மாணவர்கள் ஹைதராபாத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், சிறுவன் தர்ஷன் கவுடுக்கு இன்று நினைவு திரும்பியிருக்கிறது.

மருத்துவர்களிடம் தனது பெயர், அப்பா, அம்மா பெயர் ஆகிய விபரங்களை அளித்திருக்கிறார். உடனடியாக சிறுவனின் பெற்றோருக்கு தனியார் மருத்துவமனை தகவல் அளித்துள்ளது.

தகவலறிந்த பெற்றோர் மருத்துவமனைக்கு விரைந்தனர். பிறந்தநாளன்று, இறந்ததாக கருதப்பட்ட தங்கள் மகன் உயிருடன் கிடைத்தது அந்த பெற்றோருக்கு பெரு மகிழ்ச்சி அளித்தது. மகனை நேரில் கண்டவுடன், சுவாமி கவுட் 'இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்' என தெரிவித்தார்.

சடலம் தவறுதலாக ஒப்படைக்கப்பட்ட சம்பவத்தை ஒப்புக் கொண்ட தெலங்கானா நீர்ப் பாசனத்துறை அமைச்சர் ஹரிஷ் ராவ், 'சடலத்தை ஒப்படைப்பதில் குழப்பம் நடந்துள்ளது' என செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்நிலையில் இறுதிச் சடங்கு செய்யப்பட்டது வீரபாபு மகன் தத்து என்பதும் தெரியவந்துள்ளது. தத்து, அவனது மூத்த சகோதரி இருவரும் நேற்றைய விபத்தில் இறந்தனர்.

மகிழ்ச்சியும், விரக்தியும்:

நடந்த சம்பவம் ஒரு குடும்பத்திற்கு மகிழ்ச்சியையும், ஒரு குடும்பத்திற்கு விரக்தியையும் அளித்துள்ளது.

விபத்தில் மகளைப் பறிகொடுத்த இஸ்லாம்பூரைச் சேர்ந்த வீரபாபு நேற்றிரவு தனது மகன் தத்து எந்த மருத்துவமனையில் இருக்கிறான் என தேடி அலைந்திருக்கிறார். அப்போதுதான் அவருக்கு தனது மகன் தத்து இறந்தது தெரியவந்துள்ளது. உடனடியாக சடலத்தையாவது பெறும் முயற்சியில் ஈடுபட்ட அவருக்கு சடலம் இல்லாதது இன்னமும் வலியை தந்தது.

விவரமறிந்த மாவட்ட நிர்வாகம், மேடக் மாவட்டம் கிஸ்தாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுவாமி கவுடை தொடர்பு கொள்ளுமாறு வீரபாபுவிடம் கூறியுள்ளது.

சுவாமி கவுட் தான் ஒரு சிறுவன் உடலை சந்தேகத்தோடு பெற்றுச் சென்றதாக வீரபாபுவிடம் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வீரபாபும், சுமாவி கவுடை தொடர்பு கொண்டிருக்கிறார். அதே வேளையில், தர்ஷன் கவுட் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையும் அவரை தொடர்பு கொண்டுள்ளது.

நடந்த குழப்பம் இரண்டு குடும்பங்களுக்கும் தெளிவாக புரிந்தது.

நடந்த சம்பவங்கள் குறித்து சுவாமி கவுட் விவரிக்கையில்: "காலை 8.30 மணிக்கு என் மகனை பள்ளிப் பேருந்தில் ஏற்றி அனுப்பினேன். சிறிது நேரத்தில் தொலைபேசி அழைப்பு வந்தது, அவன் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது அதில் தனுஷ் (தர்ஷன் கவுடின் செல்லப்பெயர்) இறந்துவிட்டான் என்று தகவல் சொல்லப்பட்டது.

அலறி அடித்துக் கொண்டு, விபத்துப் பகுதிக்கு சென்றோம், பின்னர் பல மருத்துவமனைகளுக்கும் சென்றோம். இறுதியாக ஒரு மருத்துவமனையில் 'இது உங்கள் மகனா என அடையாளம் காட்டுங்கள்' என்றனர்.

எனக்கு மயக்கம் வந்துவிட்டது. துக்கம், குழப்பம், சந்தேகம் என இறுக்கமான மனநிலை. என்னால் சரிவர அடையாளம் காண முடியவில்லை. முகம் சேதமடைந்திருந்தது. அந்த சடலம் என் மகனுடனானது என நம்பி அதை வீட்டுக்கு எடுத்து வந்தேன். இறுதிச் சடங்குகளையும் செய்தேன். தனுசுக்கு பதிலாக தத்து உடலை கொண்டு வந்ததற்கு வருந்துகிறேன். தத்து பெற்றோர்களுக்காகவும் வருந்துகிறேன் என்றார்.

இந்த சம்பவத்தில், தத்து குடும்பத்தினர் மேலும் துயரமடைந்துள்ளனர். மகளை இழந்த அவர்கள் மகன் தத்து உயிருடன் இருப்பான் என நம்பினர். இப்போது தத்துவும் இல்லை, அவனது சடலமும் அவர்களுக்கு கிடைக்கவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x