Published : 23 Nov 2017 09:05 AM
Last Updated : 23 Nov 2017 09:05 AM

கட் - அவுட் இல்லை... பேனர் இல்லை... சுவர் விளம்பரம் இல்லை... தேர்தல் சுவடே இல்லை...: தமிழகத்திலிருந்து தலைகீழாக மாறுபடும் குஜராத் அரசியல் கலாச்சாரம்!

குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் அமைதியாக இருக்கிறது. சட்டப்பேரவை தேர்தலின் சுவடே தெரியவில்லை. தமிழகத்தின் அரசியல் கலாச்சாரத்துடன் ஒப்பிட்டால் தலைகீழாக இருக்கிறது குஜராத்தின் அரசியல் கலாச்சாரம். மக்கள் அன்றாட வேலைகளில் மும்முரமாக இருக்கிறார்கள். “எங்களுக்கு தொழில் இருக்கிறது பாய் சாப்... பிழைப்பு முக்கியம். அரசியல் எல்லாம் அடுத்தபடியாகதான். ஆனால், தேர்தல் நேரத்தில் முடிவை சரியாக எடுத்துவிடுவோம்...” என்கிறார் நம்மை அழைத்துச் சென்ற ஆட்டோக்காரர். உண்மைதான். தேர்தலுக்கு இன்னும் இருபது நாட்கள்கூட இல்லை. அகமதாபாத், சூரத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் எங்குமே தேர்தல் பரபரப்பு துளியும் இல்லை. எல்லாவற்றையும்விட இங்கே பேனர் இல்லை, கட்- அவுட் இல்லை, போஸ்டர்கள் இல்லை, எங்கும் அரசியல் தலைவர்களின் படம் பொறித்த ராட்சத பலூன்கள் பறக்கவில்லை, சுவர் விளம்பரம் இல்லை. சுவர்கள் பளிச்சென்று இருக்கின்றன. முக்கியமாக காதைக் கிழிக்கும் ஒலிப்பெருக்கி சத்தம் இல்லை, அதேசமயம் சில இடங்களில் மட்டுமே சம்பிரதாயத்துக்கு பிரதமர் மோடியை முன்னிறுத்தும் பேனர்கள் வைக்கப்பட்டிருக் கின்றன.

தமிழகத்தில் தற்போதைக்கு எந்தவொரு தேர்தலும் இல்லை. உள்ளாட்சித் தேர்தலும்கூட எப்போது என்று தெரியாத குழப்பமான சூழலே நிலவுகிறது. ஆனாலும் கூட பேனர்கள், பனை மர உயரத்துக்கு கட் - அவுட்கள் வைப்பதற்கு தமிழகத்தின் மாநில மற்றும் தேசியக் கட்சிகள் தயங்குவது இல்லை. குறிப்பாக, ஆளுங்கட்சியான அதிமுக எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தொடங்கி, கட்சி பிரமுகர்களின் திருமணம், காதுகுத்து விழாக்களுக்குகூட பேனர்களையும் கட்- அவுட்களையும் வைத்து ஊரையே மறைத்துவிடுகிறார்கள். பேனர்கள், கட்-அவுட்கள் வைப்பது தொடர்பாக நடக்கும் அடிதடி கலவரங்கள் ஏராளம். நீதிமன்ற வழக்குகளும் ஏராளம். இதுதொடர்பாக சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றமே உயிரோடு இருப்பவர்களுக்கு பேனர் வைக்க தடை விதித்தது. ஆனாலும் அசராமல் மேல் முறையீடு செய்தது தமிழக அரசு. பேனர்களுக்குதானே தடை என்று கோவையில் ராட்சத பலூன்களில் உருவப் படங்களை அச்சிட்டு பறக்கவிட்டார்கள் ஆளுங்கட்சி அரசியல்வாதிகள்.

குஜராத் மாநிலத்தில் இதற்கெல்லாம் முற்றிலும் மாறான அரசியல் கலாச்சாரம் நிலவுகிறது. குஜராத்தில் தேர்தல் களம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்ப்பதற்காக அகமதாபாத் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊர்களான மணிநகர், காந்தி நகர், சூரத், வதோதரா, ராஜ்கோட், ஜாம் நகர், பவன்நகர், ஆனந்த் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி வந்தோம். இங்கெல்லாம் பெரியதாக எந்தவொரு தேர்தல் பரபரப்பும் இல்லை. மாநிலத்தின் பிரதான கட்சிகளான பாஜக-வும், காங்கிரஸ் கட்சியும் தலா இருகட்டங்களாகவும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பின்பும் பிரச்சாரம் குறித்து வேட்பாளர்கள் பெரியதாக அலட்டிக்கொள்ளவில்லை. மக்களிடம் எந்தச் சலனமும் இல்லை.

தொழில் வேறு... அரசியல் வேறு!

நம்மிடம் பேசிய அகமதாபாத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரான வினய், “குஜராத் எப்போதுமே இப்படிதான். பெரும்பாலும் நகரப் பகுதிகளில் வணிகச் சமூகங்களையும் கிராமங்களில் விவசாய சமூகங்களையும் உள்ளடக்கியது குஜராத் மாநிலம். நகரங்களில் சாமானியர்கள்கூட மிகச் சிறியதாக ஏதேனும் ஒரு சொந்தத் தொழில் செய்வதை பார்க்க முடியும். குஜராத்திகளுக்கு எப்போதுமே தங்கள் தொழில்தான் முக்கியம். தமிழகத்தில் டீக்கடையில் காரசாரமாக அரசியல் பேசுவதைப் போல எல்லாம் இங்கு பேச மாட்டார்கள். தேர்தல் சமயத்தில் மட்டுமே அரசியலைப் பற்றி யோசிப்பார்கள். அதற்காக இங்கிருக்கும் மக்களிடம் அரசியல் விழிப்புணர்வு இல்லை என்று அர்த்தம் இல்லை. குஜராத்திகள் தெளிவாக இருக்கிறார்கள். அவர்கள் அரசியல் வேறு; தங்கள் தொழில் வேறு என்று தனித்தனியாக பிரித்து வைத்திருக்கிறார்கள்.

மக்கள் அரசியல் பொதுக்கூட்டங்களுக்கு போகத் தொடங்கியதுகூட 2002-க்கு பிறகுதான் அதிகமானது. அதுவும்கூட பாஜக அடித்துப்பிடித்து ஆட்களைத் திரட்டியதுதான் காரணம். இப்போதும் கூட இங்கு பொதுக்கூட்டங்களுக்கு பாஜக ஆட்களை திரட்டுவதும் இங்கே பெரும்பாடாக இருக்கிறது. கூட்டங்களுக்கு மக்களை திரட்டுவதற்கு சராசரியாக நபர் ஒருவருக்கு ரூ.500 வரை பாஜக செலவு செய்கிறது. சமீபத்தில் உத்தரபிரதேச முதல்வரும் மோடிக்கு நெருக்கமானவருமான யோகி ஆதித்யநாத் குஜராத்துக்கு வந்தபோது கூட பெரியதாக எந்தக் கூட்டமும் இல்லை. பத்துக்கும் குறைவான அரசியல் பிரமுகர்கள் மட்டுமே அவருடன் வந்தனர். அதேபோல எவ்வளவு பெரிய அரசியல் பிரமுகர் என்றாலும் குஜராத் மக்கள் பெரியதாக அலட்டிக்கொள்ள மாட்டார்கள். அவர்களுக்கு அதிக மரியாதை அளிப்பது, குனிந்து பவ்யம் காட்டுவது போன்ற பழக்கங்கள் எல்லாம் குஜராத் மக்களிடம் இல்லை. மோடி மாநில அரசியலில் இருந்த காலகட்டங்களில் சாமானிய தொழிலாளி கூட கூட்டங்களில் அவரைப் பார்க்கும்போது ‘நரேந்திர பாய் கைஸே ஹோ?’ (நரேந்திர பாய் எப்படி இருக்கீங்க?) என்று பெயர் சொல்லித்தான் அழைப்பார்கள்.

அதேபோல குஜராத்தி மக்கள் ஒருபோதும் அரசியல் காரணமாக தங்கள் தொழில் பாதிப்படைவதை அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். திடீரென உணர்ச்சிவசப்பட்டு கொந்தளிப்பதும் கிடையாது. ஒட்டுமொத்தமாக மவுனம் காப்பதும் கிடையாது. கடந்த கால சம்பவங்கள் எல்லாவற்றையும் மனக் கணக்கு போட்டு வைத்திருப்பார்கள். தேர்தல் சமயத்தில் யாருக்கு வாக்களிப்பது என்பதன் மூலம் தங்கள் பதிலைச் சொல்லிவிடுவார்கள். வாக்குப் பதிவு அன்றைய நாட்களிலும் பெரியதாக பரபரப்பு இருக்காது. ஓட்டு போட்டுவிட்டு அவரவர் தங்களது தொழிலைப் பார்க்க சென்றுவிடுவார்கள். இதை உணர்ந்ததாலேயே அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு ஒரு வாரம் இருக்கும்போது மட்டுமே தங்களது பிரச்சாரத்தை தீவிரப்படுத்துகின்றன...” என்கிறார்.

இதனாலேயே கட்-அவுட், பேனர்கள், சுவர் விளம்பரங்கள் மூலம் மக்களை ஈர்க்க முடியாது; அதற்காக செய்யும் செலவுகளும் வீண் என்று இங்கிருக்கும் அரசியல் கட்சிகளும் உணர்ந்திருக்கின்றன. ஆனாலும் முதன்முதலாக குஜராத்தில் கட் - அவுட் கலாச்சாரத்தை கொண்டு வர முயற்சித்தார் மோடி. “2000-களின் தொடக்கத்தில் குஜராத் அரசியலில் மோடி விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தபோது முதன்முறையாக மாநிலம் எங்கும் அவரது கட்-அவுட்கள், பேனர்கள் முளைத்தன. பள்ளிக் குழந்தைகளுக்குக்கூட மோடியின் முகமுடிகள் விநியோகிக்கப்பட்டன. மோடியை விளம்பரப்படுத்தும் சுவர் விளம்பரங்கள், ஒலிப்பெருக்கிகள் ஊரையே ஆக்கிரமித்தன. இந்த புதிய கலாச்சாரம் குஜராத் மக்களுக்கு புதியதாகவும் அதே சமயம் பெரும் இடையூறாகவும் இருந்ததால் மாநிலம் எங்கும் கடும் அதிருப்தியும் அதையொட்டிய சர்ச்சைகளும் எழுந்தன.

அதேசமயம் மத்திய தேர்தல் ஆணையமும் இதுபோன்ற விளம்பரங்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. கூடவே மக்களிடம் இதுபோன்ற விளம்பர யுக்திகள் எடுபடவில்லை. இதனால், கட் -அவுட் விளம்பர பாணி கலாச்சாரத்திலிருந்து பின்வாங்கியது பாஜக. இதற்கு மாற்றாக பிரம்மாண்டமான பொதுக்கூட்ட மேடை பிரச்சாரம் மற்றும் ஓரிடத்தில் மோடி பேசும் பொதுக்கூட்டத்தை டிஜிட்டல் வடிவத்தில் பல்வேறு இடங்களில் ஒளிப்பரப்பும் யுக்தி போன்ற விளம்பர பாணிகளை கையில் எடுத்தது பாஜக” என்கிறார்கள் குஜராத்தின் முக்கிய பத்திரிகையாளர்கள்.

ஆனாலும், ஆரம்பத்தில் பாஜக தொடங்கிய கட் - அவுட் கலாச்சாரத்தின் நீர்த்துப்போன வடிவத்தை தற்போதும் பார்க்க முடிகிறது. பெரியதாக கட் - அவுட்கள், பேனர்கள், சுவர் விளம்பரங்கள் வைக்கப்படாத நிலையில் நகரங்களில் மோடி மற்றும் பாஜக கட்சித் தலைவர் அமித் ஷா ஆகியோரை முன்னிறுத்தும் பேனர்களை சில இடங்களில் மட்டும் வைத்திருக்கிறார்கள். அதேசமயம், மாநில தேர்தல் ஆணையம் நகரின் முக்கிய இடங்கள் அனைத்திலும் மக்களின் ஓட்டு உரிமையை வலியுறுத்தி விழிப்புணர்வு விளம்பரங்களை வைத்துள்ளது.

குஜராத் மாநில சட்டசபைத் தேர்தல் வரும் டிசம்பர் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இருகட்டங்களாக நடக்கிறது. மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 89 தொகுதிகளுக்கு டிசம்பர் 9-ம் தேதியும், 93 தொகுதிகளுக்கு டிசம்பர் 14-ம் தேதியும் தேர்தல் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 18-ம் தேதி நடக்கிறது. கடந்த 1995-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 22 ஆண்டுகளாக குஜராத் மாநிலத்தில் ஆட்சியிலிருக்கும் பாஜக கட்சி, சுமார் 40 சதவீதம் வாக்கு வங்கியை வைத்துள்ளது. குஜராத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் கடந்த 1995-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 121 தொகுதிகளையும், 1998-ல் 117 தொகுதிகளையும், 2002-ல் 127 தொகுதிகளையும், 2007-ல் 117 தொகுதிகளையும், 2012-ல் 119 தொகுதிகளையும் அந்தக் கட்சி கைப்பற்றியிருக்கிறது. அதேசமயம் காங்கிரஸ் கட்சி 1995-ம் ஆண்டு 45 தொகுதிகளையும், 1998-ம் ஆண்டு 53 தொகுதிகளையும், 2002-ம் ஆண்டு 51 தொகுதிகளையும், 2007-ம் ஆண்டு 59 தொகுதிகளையும், 2012-ம் ஆண்டு 57 தொகுதிகளையும் கைப்பற்றியிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x