

கோப்புப்படம்
புதுடெல்லி: நடப்பாண்டில் அமெரிக்காவில் இருந்து 1,076 இந்தியர்கள் வெளியேற்றப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரியில் அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றார். அவர் பொறுப்பேற்ற பிறகு அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
இந்த சூழலில் மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் டெல்லியில் நேற்று முன்தினம் நிருபர்களிடம் கூறியதாவது:
கடந்த 2025-ம் ஆண்டில் அமெரிக்காவில் இருந்து 3,567 இந்தியர்கள் வெளியேற்றப்பட்டனர். நடப்பாண்டில் இதுவரை அமெரிக்காவில் இருந்து 1,076 இந்தியர்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர்.
இந்த விவகாரத்தில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். சட்டப்பூர்வமாக அமெரிக்காவில் குடியேறியவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி லாரி ஓட்டுநர்களாக பணியாற்றிய 30 இந்தியர்கள் அண்மையில் கைது செய்யப்பட்டனர். முன்னாள் அதிபர் பைடன் ஆட்சிக் காலத்தில் அவர்கள் பணி விசா பெற்றனர்.
அவை காலாவதியாகிவிட்டன. எனவே அவர்கள் விரைவில் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று அமெரிக்க அரசு தெரிவித்து உள்ளது.