Last Updated : 04 Nov, 2017 09:24 AM

 

Published : 04 Nov 2017 09:24 AM
Last Updated : 04 Nov 2017 09:24 AM

கர்நாடகாவில் தனியார் மருத்துவமனைகள் அடைப்பு: லட்சக்கணக்கான நோயாளிகள் அவதி

கர்நாடகாவில் தனியார் மருத்துவமனை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் நேற்று முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டன. இதனால் லட்சக்கணக்கான நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

கர்நாடகாவில் தனியார் மருத்துவமனைகள் சட்டத் திருத்த மசோதாவை வரும் 13-ம் தேதி தொடங்கும் குளிர்கால சட்டப்பேரவை கூட்டத்தில் அம்மாநில அரசு தாக்கல் செய்யவுள்ளது.

இந்த மசோதா நிறைவேறினால், தனியார் மருத்துவமனைகளின் சிகிச்சைக் கட்டணத்தை அரசே தீர்மானிக்கும். சிகிச்சையில் குறைபாடு இருந்தால் அரசு நடவடிக்கை எடுக்கும். தனியார் மருத்துவமனைகளின் செயல்பாட்டை கண்காணிக்க மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்படும். தவறான சிகிச்சை அளிக்கும் மருத்துவருக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ. 5லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்.

இந்த மசோதாவுக்கு இந்திய மருத்துவ சங்கம், கர்நாடக தனியார் மருத்துவமனை கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதை முதல்வர் ஏற்காததால் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் நேற்று முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டன. இதனால் தனியார் மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவு மட்டுமே இயIங்கின. புறநோயாளிகளுக்கான பிரிவுகள், மருந்தகங்கள், உடல் பரிசோதனை மையங்கள் மூடப்பட்டன. சில மருத்துவமனைகளில் உள்நோயாளி பிரிவு, ஆம்புலன்ஸ் வாகன சேவையும் நிறுத்தப்பட்டது. இதனால் லட்சக்கணக்கான நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.

கர்நாடக தனியார் மருத்துவமனைகளின் கூட்டமைப்பு சங்கத் தலைவர் எச்.என்.ரவீந்திரா கூறும்போது, “இந்த மசோதா மருத்துவர்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. இதை அரசு திரும்பப் பெறாவிடில் வரும் 10-ம் தேதி மீண்டும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x