

விலைவாசி உயர்வுக்கு காரணமாகி வரும் மத்திய அரசுக்கு எதிராக ஒன்றுதிரளுமாறு மக்களுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.
திரிணமூல் காங்கிரஸ் ஆளும் மேற்கு வங்கத்தில் பாஜகவால் முக்கிய அரசியல் சக்தியாக உருவாக முடியாது என்றும் அவர் கூறினார்.
கொல்கத்தாவில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசும்போது, “ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்தில் பெட்ரோல், டீசல் விலை, ரயில் கட்டணங்களை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. தேர்தலுக்கு முன் பல வாக்குறுதிகளை பாஜக அளித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு அதன் செயல்பாடுகள் நேர்மறாக உள்ளன. இவற்றுக்கு எதிராக ஜனநாயக ரீதியில் போராட நாம் ஒன்றுதிரளுவோம்” என்றார்.
பாஜகவுக்கு எதிராக அவர் பேசுகையில், “மதவாத கட்சிக்கு மேற்கு வங்கத்தில் இடமில்லை. மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் அவர்கள் 2 இடங்கள் வென்ற பிறகு, மாநில அரசுக்கு எதிராக அதிக அளவில் பொய் பிரச்சாரம் செய்கின்றனர். அடுத்த தேர்தலில் அந்த 2 இடங்களைக் கூட அவர்கள் பெறமாட்டார்கள். அவர்கள் 2 இடங்களுக்கு மேல் ஒருநாளும் பெறமுடியாது. பல இடங்களில் வகுப்புக் கலவரத்தை ஏற்படுத்த முயற்சி நடக்கிறது. எனவே மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும்” என்றார்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணியைச் சேர்ந்த 13 பேர், கடந்த 1993-ம் ஆண்டு, ஜூலை 21-ம் தேதி போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட் டனர். இந்த நாளை தியாகிகள் தினமாக அக்கட்சி அனுசரித்து வருகிறது. இதையொட்டி கொல் கத்தாவில் பேரணி மற்றும் பொதுக் கூட்டம் திங்கள்கிழமை நடை பெற்றது.
இதையொட்டி மாநிலம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக் கானோர் திரண்டதால், கொல்கத்தா வில் திங்கள்கிழமை கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.
மகாசேசே விருது பெற்ற பிரபல எழுத்தாளர் மகாஸ்வேதா தேவி மற்றும் வங்காள திரைப் பட நட்சத்திரங்கள் பலர் பொதுக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 3 பேர் இக்கூட்டத்தில் மம்தா கட்சியில் இணைந்தனர். இதன் மூலம் திரிணமூல் காங்கிரஸின் இணைந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. மாநில சட்டமன்றத்தில் காங்கிரஸ் பலம் 42-ல் இருந்து 35 ஆக குறைந்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ ஒருவரும் இக்கூட்டத்தில் திரிணமூல் காங்கிரஸில் இணைந்தார். இதனால் சட்டமன்றத்தில் மார்க்சிஸ்ட் பலம் 40-ல் இருந்து 39 ஆக குறைந்துள்ளது.இவர்கள் தவிர பல்வேறு கட்சிகளின் உள்ளூர் தலைவர்கள், தொண்டர்கள் என நூற்றுக்கணக்கானோர் மம்தா கட்சியில் இணைந்தனர்.