Published : 18 Jul 2014 04:32 PM
Last Updated : 18 Jul 2014 04:32 PM

ஹபீஸ் சையீதுக்கு எதிராக ஆதாரம் இல்லை: பாகிஸ்தான் கைவிரிப்பு

ஹபீஸ் சையீதை சிறையில் அடைக்க வேண்டுமானால் அவருக்கு எதிராக வலுவான ஆதாரம் வேண்டும். உலக நாடுகளை திருப்தி படுத்துவதற்காக எங்கள் நாட்டுப் பிரஜையான அவரை சிறையில் அடைக்க முடியாது என இந்தியாவுக்கான பாகிஸ்தான் துணை தூதர் அப்துல் பாஸிட் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அப்துல் பாஸிட் இதனை தெரிவித்தார்.

பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஜமாத் உத் தாவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சையீதும், இந்திய பத்திரிகையாளர் வேத் பிரதாப் வைதிக்கும் சந்தித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சந்திப்புக்கும், மத்திய அரசுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஏற்கெனவே விளக்கமளித்துள்ளார்.

இந்நிலையில், இன்று டெல்லியில், இந்தியாவுக்கான பாகிஸ்தான் துணை தூதர் அப்துல் பாஸிட்டிடம் ஹபீஸ் - வைதிக் சந்திப்பு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த பாஸிட்: "ஹபீஸ் சையீது - வேத் பிரதாப் வைதிக் சந்திப்பு இரு நாட்டு பிரஜைகள் இருவருக்கு இடையே நடந்த தனிப்பட்ட சந்திப்பு. இது குறித்து பாகிஸ்தான் தூதரகத்திற்கு எதுவும் தெரியாது. இந்திய அரசும் இதையேதான் சொல்கிறது. எனவே இவ்விவகாரத்தில் நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. பாகிஸ்தானில் நடந்த பிராந்திய அமைதி தொடர்பான கருத்தரங்கில் கலந்து கொள்ள மணி சங்கர் ஐயர் தலைமையிலான 14 பேர் கொண்ட குழுவில் வைதிக் இடம் பெற்றிருந்தார். கருத்தரங்கு முடிந்த பின்னர் தாயகம் திரும்பாமல் வைதிக்கும் வேறு சிலரும் பாகிஸ்தானில் தங்கியதாக தெரிகிறது. இது மட்டுமே பாகிஸ்தானுக்கு தெரியும்" என்றார்.

மும்பையில் 2011-ம் ஆண்டு நவம்பர் 26-ல் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஜமாத் உத் தாவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சையீதுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஐ.நா. சபை ஜமாத் உத் தாவா அமைப்பை தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவித்துள்ளது. அப்படி இருக்கும் போது ஹபீஸை எப்படி ஒரு சாதாரண் பிரஜ்ஜை என கூறுகிறீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகள் எழுந்த பின்னர் நாங்கள் ஹபீஸ் சையீதை கைது செய்தோம். ஆனால் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் வலுவான ஆதாரம் ஏதும் இல்லை. இன்றுகூட ஹபீஸூக்கு எதிராக ஆதாரம் இருந்தால் அதை எங்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். அப்படி இல்லாமல், உலக நாடுகளை திருப்தி படுத்துவதற்காக எங்கள் நாட்டு பிரஜைகளை சிறையில் அடைக்க முடியாது. எங்களுக்கு என்று சட்டதிட்டங்கள் இருக்கின்றன என தெரிவித்தார்.

மும்பை தாக்குதல் வழக்கு விசாரணை பாகிஸ்தானில் காலம் தாழ்த்தப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளிக்க பாஸிட் மறுத்துவிட்டார். நீதிமன்ற விசாரணையில் இருக்கும் வழக்கு பற்றி தான் பேச விரும்பவில்லை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x