”2024 தேர்தலுக்குப் பின்னர் மோடி வெளிநாட்டில் செட்டில் ஆகிவிடுவார்” - லாலு கிண்டல்

லாலு பிரசாத் யாதவ் | கோப்புப் படம்
லாலு பிரசாத் யாதவ் | கோப்புப் படம்
Updated on
1 min read

பாட்னா: 2024 நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பின்னர் மோடி வெளிநாட்டில் செட்டில் ஆகிவிடுவார். அதற்காகத்தான் அவர் இப்போது எல்லா நாடுகளுக்கும் சென்றுவருகிறார் என்று ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ் விமர்சித்துள்ளார்.

நீண்ட நாட்களுக்குப் பின்னர் லாலு பிரசாத் யாதவ் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மகன் தேஜஸ்வி யாதவுடன் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் ஒரு கேள்வி எழுப்பினர். "எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி ஊழல், குடும்ப நலன் மற்றும் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளால் ஆனது. இண்டியா கூட்டணி அல்ல இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டிய குவிட் இண்டியா (Quit India) கூட்டணி" என்று பிரதமர் கூறிய விமர்சனம் குறித்து கருத்து கேட்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த லாலு பிரசாத் யாதவ், "பிரதமர் மோடிதான் இந்தியாவில் இருந்து வெளியேற திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார். அதற்காகத்தான் அவர் நிறைய நாடுகளை சுற்றிவருகிறார். எந்த நாட்டில் தான் நிம்மதியாக பீட்சா, மோமோஸ், செள மெய்ன் சாப்பிட்டுக் கொண்டிருக்கலாம் எனத் தேர்வு செய்வதற்காக உலகம் சுற்றுகிறார்" என்று பதில் கூறினார். அவருடைய பதிலைக் கேட்டு அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பரித்தனர்.

லாலு பிரசாத் யாதவ் தன் வார்த்தை ஜாலங்களால் அரசியல் கேலி செய்வதில் பெயர் பெற்றவர். 80 வயதைக் கடந்த அவருக்கு அண்மையில்தான் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. அதன்பின்னர் ஓய்வில் இருந்த அவர் நீண்ட நாட்களுக்குப் பின்னர் பொது வெளியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டது ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in