

இம்பால்: மணிப்பூர் கலவரம் கடந்த 3 மாதங்களாக நீடித்து வரும் நிலையில் பிரதமர் அதுகுறித்து கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டி வருவதாக, மணிப்பூருக்கு நேரில் சென்று வந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குற்றம்சாட்டினர்.
21 எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் குழுவினர் மணிப்பூருக்கு சென்று, அங்கு கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்துப் பேசினர். இதையடுத்து, கோரிக்கை மனுவை மணிப்பூர் ஆளுநர் அனுசுயா உய்கேவிடம் வழங்கினர்.
பின்னர், அவர்கள் கூறியதாவது: மணிப்பூரில் கடந்த 3 மாதங்களாக நீடித்து வரும் இனக் கலவரத்தில் 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 5,000-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன. 60,000 பேர் இடம்பெயர்ந்து உள்நாட்டிலேயே அகதிகளாக மாறியுள்ளனர்.
இனமோதலை கட்டுக்குள் கொண்டு வருவதில் மத்திய, மாநில அரசு இயந்திரங்கள் முற்றிலும் தோல்வியடைந்துள்ளன. இந்த விவகாரத்தில் பிரதமரின் மவுனம் அவரது அலட்சியத்தை எடுத்துக்காட்டுகிறது.
கடந்த சில நாட்களாக இடைவிடாத துப்பாக்கிச் சூடு, வீடுகளுக்கு தீ வைப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அனைத்து சமூகத்தினர் இடையேயும் கோபமும், தனித்துவிடப்பட்ட உணர்வும் அதிகரித்துள்ளது. இதை உணர்ந்து மத்திய, மாநில அரசுகள் அனைத்து பயனுள்ள நடவடிக்கைகளையும் உடனே மேற்கொண்டு, மாநிலத்தில் அமைதி, நல்லிணக்கத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று ஆளுநரிடம் கேட்டுக் கொண்டுள்ளோம்.
முகாம்களின் நிலைமை: நிவாரண முகாம்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அங்கு, குறைந்தபட்சம் குழந்தைகளுக்கு மட்டுமாவது முன்னுரிமை அடிப்படையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். படிப்பு தடைபட்டுள்ளதால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியுள்ளது. உடனடியாக, அவர்களை அந்த சூழலில் இருந்து மீட்டெடுப்பது மத்திய, மாநில அரசுகளின் முன்னுரிமை நடவடிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மணிப்பூருக்கு சென்று வந்த பிறகு, டெல்லியில் செய்தியாளர்களிடம் எம்.பி.க்கள் கூறியதாவது:
திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி: மணிப்பூர் மக்கள் மீது மத்திய, மாநில அரசுகளுக்கு அக்கறை இல்லை என்பதை தெளிவாக பார்க்க முடிந்தது. அனைத்து இடங்களிலும் அதிரடிப் படை போன்றவை இருப்பதால் அமைதி திரும்பியது போல ஒரு நிலை இருக்கிறதே தவிர, அமைதி திரும்பவில்லை. ஆங்காங்கே வன்முறைகள் வெடித்துக் கொண்டிருக்கின்றன. எனவே, மணிப்பூரில் அமைதி திரும்பியதாக கூறுவது பொய். முகாம்களில் இருப்போர் மீண்டும் வீடுகளுக்கு திரும்ப அஞ்சுகின்றனர். மருத்துவ கல்லூரிகளுக்கு திரும்பிச் செல்லும் வாய்ப்பு இல்லாமல் மாணவர்கள் தவிக்கின்றனர். அவர்களது எதிர்காலம் மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. முகாம்களில், குழந்தைகளுக்கு உணவு, மருத்துவ வசதி போன்றவை இல்லை. அனைத்து சமூகத்தினருக்கும் அரசு மீதுநம்பிக்கை இல்லை.
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களை பெண் எம்.பி.க்கள் குழு சந்தித்தோம். அவர்கள் மனரீதியாக மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களுக்கு நியாயம், நீதி கிடைக்க வேண்டும் என மீண்டும் மீண்டும் வலியுறுத்தினர். எங்களை காப்பாற்ற வேண்டிய காவல் துறையே வன்முறை கும்பலில் ஒப்படைத்தது எனவும், கைவிட்ட காவல் துறை மீது எந்த நடவடிக்கையும் இல்லை எனவும் பெண்கள் வருந்தினர். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேச வாய்ப்பு அளிக்க வேண்டும். விவாதம் நடத்தி, பிரதமர் பதில் அளிக்க வேண்டும்.
விசிக தலைவர் திருமாவளவன்: சுராசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள முகாம்களில் தங்கியுள்ள மக்களை சந்தித்தோம். அதன்பின் மொரைன் கிராமத்தின் மக்களை சந்தித்தோம். மாநில அரசு பாதுகாப்பு, நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என அவர்கள் புகார் தெரிவித்தனர். முகாம்களில் உணவு, மின்சாரம், குடிநீர் வசதிகள் இல்லை. தனியார் நிறுவனங்கள் தாமாக முன்வந்து உடை போன்றவற்றை வழங்கி வருவதாக தெரிவித்தனர். குக்கி, மெய்தி சமூகத்தினர் மீண்டும் இணைந்து வாழ முடியாது என்ற வருத்தத்தை பகிர்ந்து கொண்டனர்.
நாடாளுமன்றத்தில் விவாதம்: பழங்குடியினராக மெய்தி சமூகத்தினர் உரிமை கோர முடியாது என குக்கி சமூகத்தினரும், மியான்மரில் இருந்து குக்கி சமூகத்தினர் சட்ட விரோதமாக புலம்பெயர்ந்தவர்கள் என்பதால் அவர்களை திருப்பி அனுப்ப வேண்டும் என மெய்தி சமூகத்தினரும் கூறினர். அவர்களின் குரலை எதிரொலிக்கும் வகையில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் விவாதத்துக்கு அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மக்களவையின் காங்கிரஸ் துணை தலைவர் கவுரவ் கோகோய், கனிமொழி (திமுக), திருமாவளவன் (விசிக), சுஷ்மிதா தேவ் (திரிணமூல்), மஹுவா மாஜி (ஜேஎம்எம்), முகமது பைசல் (என்சிபி), சவுத்ரி ஜெயந்த் சிங் (ஆர்எல்டி) உள்ளிட்ட எம்.பி.க்கள் இக்குழுவில் இடம்பெற்றிருந்தனர்.