

திருப்பதி: ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் குப்பம் அருகே உள்ள வி.கோட்டா பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி லட்சுமணன். இவருக்கும் இலங்கையை சேர்ந்த விக்னேஸ்வரி என்பவருக்கும் இடையே கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் முகநூல் வழியாக அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இது பிறகு காதலாக மாறியுள்ளது. தினமும் தொலைபேசி மூலம் பேசி காதலை வளர்த்து வந்த இவர்கள், திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர்.
ஆனால், யார், எங்கு வருவது என்ற பிரச்சினை எழுந்தபோது, விக்னேஸ்வரி “நானே உங்கள் ஊருக்கு வருகிறேன்” என்றார்.
அதுபோல் சுற்றுலா விசாவில் கடந்த 20 நாட்களுக்கு முன் காதலனை தேடி இந்தியா வந்தார். விமானத்தில் சென்னைக்கு வந்த அவர் பிறகு வி.கோட்டா ஆரிமாகுல பல்லியில் வசிக்கும் தனது காதலன் லட்சுமணனை நேரில் சந்தித்தார். இருவரும் தங்கள் குடும்பத்துடன் பேசி தங்கள் திருமணத்திற்கு சம்மதம் பெற்றனர்.
இதையடுத்து இவர்களது திருமணம் 15 நாட்களுக்கு முன் அங்குள்ள சாய்பாபா கோயிலில் எளிய முறையில் நடைபெற்றது. மணமக்களை அனைவரும் வாழ்த்தினர்.
இந்நிலையில் இளம் தம்பதிக்கு அடுத்த பிரச்சினை தொடங்கியுள்ளது. விக்னேஸ்வரியின் சுற்றுலா விசா வரும் ஆகஸ்ட் 6-ம் தேதியுடன் முடிவடைகிறது.
இதுபற்றி அறிந்து சித்தூர் எஸ்பி அலுவலகத்தில் இருந்து விக்னேஸ்வரிக்கு தகவல் வந்துள்ளது. அதில் “வரும் 6-ம் தேதிக்குள் நீங்கள் தாயகம் திரும்ப வேண்டும், அதற்குள் முறைப்படி பதிவுத் திருமணம் செய்ய வேண்டும். பிறகு இலங்கையில் இருந்து லட்சுமணன் மனைவியாக இந்தியா வரலாம்” என போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், தற்போது பதிவு திருமண வேலைகள் நடைபெற்று வருவதாக லட்சுமன் கூறினார்.