

மகாராஷ்டிர மாநிலத்தின் தானே மாவட்டத்தில் கன மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு சுமார் 50 கிராமங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்ட்ராவில் பருவ மழை தொடங்கியுள்ளது. இதனால் அந்த மாநிலத்தின் பல்கர். வசாய், தானு மற்றும் விக்ரம்கத் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்து வருகின்றன. இதில் மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டமாக தானே உள்ளது. அங்கு பெய்து வரும் தொடர் மழையால் பல பகுதிகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. சுமார் 50 கிராமங்கள் இயங்க முடியாமல், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தானேவின் கிழக்கு பகுதியான பத்லாப்பூர் உள்ளிட்ட சில இடங்களில், பல வீடுகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. இதனால் அந்த பகுதி மக்கள் தங்களது வீடுகளை இழந்த சாலை ஓரங்களில் தங்கி உள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து வெளியேற முடியாத மக்களை மீட்பதற்காக தீயணைப்பு வீரர்கள் விரைந்துள்ளனர்.
மோசமான பாதிப்பு உள்ள இடங்களில் உள்ள மக்களை மீட்டு பாதுகாப்பான பகுதிகளுக்கு அனுப்பும் பணி மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல்கர் தாலுக்காவின் மனார் பகுதியில் விடுதிகளில் தங்கியிருந்த 25-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சிக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் அவர்களை மீட்டு கொண்டவரக்கூடிய சாலை வழிகள் அனைத்தும் மழையால் அடித்து செல்லப்பட்டதால் அவர்களை மீட்கும் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
பல்கர்- மனார் சாலைகளை இணைக்கும் இரண்டு மேம்பாலங்களும் மழை நீரால் மூழ்கியுள்ளன. இதனால் கடந்த இரு தினங்களாக அங்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.