

புதுடெல்லி: மணிப்பூர் மாநில கலவரத்தில் 182 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயம் அடைந்தனர்.
இந்நிலையில் குகி பழங்குடியின பெண்கள் இருவர் ஆடையின்றி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் மணிப்பூர் மாநில நிலவரத்தை நேரில் சென்று ஆய்வு செய்ய நாடாளுமன்றத்தின் இருஅவைகளைச் சேர்ந்த 21 உறுப்பினர்கள் அடங்கிய குழு டெல்லியில் இருந்து நேற்று மணிப்பூர் சென்றது.
இந்த குழுவில் காங்கிரஸின் ஆதிர் ரஞ்சன் சவுத்திரி, கவுரவ் கோகாய், கே.சுரேஷ் மற்றும் புலோ தேவி நேதம், ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த ராஜிவ் ரஞ்சன், திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுஷ்மிதா தேவ், திமுகவைச் சேர்ந்த கனிமொழி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சந்தோஷ் குமார், மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ரஹிம். ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த மனோஜ் குமார், சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த ஜாவேத் அலி கான், ஜார்க்கண்ட் முக்கி மோர்சா கட்சியைச் சேர்ந்த மகுவா மாஜி, தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முகமது ஃபைசல், ஐக்கிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அனில் பிரசாத் ஹெக்டே, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த முகமது பஷீர், ஆர்எஸ்பி கட்சியைச் சேர்ந்த பிரேமசந்திரன், ஆம் ஆத்மியைச் சேர்ந்த சுஷில் குப்தா, சிவசேனா உத்தவ் அணியைச் சேர்ந்த அரவிந்த் சாவந்த், விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த திருமாவளவன், ரவிக்குமார், ஆர்எல்டி கட்சியை சேர்ந்த ஜெயந்த் சிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இவர்கள் 2 குழுக்களாக பிரிந்து மணிப்பூரின் சூரசந்த்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு வருகின்றனர். முகாம்களில் தங்கியுள்ள பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்து நிலவரத்தை கேட்டறிகின்றனர்.
மணிப்பூரின் தொலைதூர பகுதிகளுக்கு ஹெலிகாப்டரில் செல்லவும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அனுமதி கேட்டுள்ளனர். இதற்கு அனுமதி கிடைத்தால் தொலைதூர பகுதிகளையும் பார்வையிடுவர்.