பந்தய சேவல்கள் வாங்க தாய்லாந்து நாட்டினர் வருகை
ஏலூரு: ஆந்திர மாநிலம், கோதாவரி மாவட்டங்களில் சங்கராந்தி (பொங்கல்) பண்டிகையின் போது சேவல் பந்தயங்கள் நடைபெறுவது வழக்கம். அரசியல், சினிமா பிரமுகர்கள், தொழிலதிபர்கள் பலர் நேரடியாக பந்தயங்களில் கலந்துகொள்வார்கள்.
இந்தப் பந்தயங்களுக்கென்று இப்பகுதிகளில் சேவல்கள் தனித்துவமான முறையில் வளர்க்கப்படுகின்றன. அவற்றுக்கு தினமும் பாதாம், முந்திரி, முட்டை மற்றும் புரத சத்துக்கள், விட்டமின் மாத்திரைகள் கொடுத்து, சண்டைக்கு பழக்கி வைக்கின்றனர்.
இந்நிலையில், இது தொடர்பாக சமூக வலைதளங்களில் உள்ள தகவல்களை பார்த்து ஆந்திராவில் வளர்க்கப்படும் பந்தய சேவல்களை வாங்க, தாய்லாந்தில் இருந்து 4 பேர் கிழக்கு கோதாவரி மாவட்டம், ஏலூரு வந்தனர். அப்போது இவர்கள் அனைவரும், ரங்காபுரம் எனும் ஊரில் பந்தய சேவல்களை வளர்க்கும், ரத்தைய்யா என்பவரை சந்தித்து ரூ.3 லட்சம் கொடுத்து ஒரு பந்தய சேவலை தங்களது நாட்டுக்கு வாங்கிச் சென்றுள்ளனர்.
ரூ.27 லட்சம் பரிசு: இது குறித்து ரத்தைய்யா நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “கடந்த ஆண்டு போகி பண்டிகையன்று, நான் வளர்த்த சேவல், கனபவரம் எனும் ஊரில் நடந்த பந்தயத்தில் கலந்துகொண்டு ரூ.27 லட்சம் பரிசு தொகையை வென்றது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் உலா வருகிறது.
இதைப் பார்த்த தாய்லாந்து நாட்டை சேர்ந்த 4 பேர், கடந்த புதன்கிழமையன்று என்னிடம் வந்து, ரூ.27 லட்சம் பரிசு தொகையை வென்ற சேவலை விலைக்குக் கேட்டனர். அதற்கு நான் மறுத்து விட்டேன். அதன் பின்னர் ரூ.3 லட்சம் கொடுத்து மற்றொரு பந்தய சேவலை அவர்கள் வாங்கிச் சென்றனர்” என்று தெரிவித்தார்.
