

தில்லி தமிழ்ச் சங்கத்திற்கு ரூ. 25 லட்சம் மதிப்பில் தோரண வாயில் கட்டப்பட உள்ளது. இதற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் ரூ. 25 லட்சம் நன்கொடை அளித்துள்ளார்.
இந்த தோரண வாயில் மிகவும் சிறப்பு அம்சங்களை கொண்டதாக அமையவுள்ளது. 16 அடி ஆழத்தில் அஸ்திவாரம் அமைத்து, இரண்டு பக்கங்களிலும் 4 அடிக்கு 4 அடி அளவுள்ள தூண்கள் எழுப்பப்பட உள்ளன. இந்த தோரண வாயிலின் உயரம் 34அடி 2 அங்குலம், அகலம் 27அடி.
இந்த நுழைவு வாயிலின் இரு புறங்களிலும் இரட்டை யாழி, மேல்புறம் உயரமான தீபம் ஏந்திய பெண், திருவள்ளுவர் போன்ற சிற்பங்கள் அமைக்கப்பட உள்ளன. மேல் சாரத்தின் மத்தியில் ஆறு அடி உயரமுள்ள தமிழ்த் தாயின் சிலையுடன், சோழர் காலத்தின் சிற்பங்களும் உத்திரங்களும் பொறிக்கப்பட இருக்கின்றன.
இது குறித்து சங்கத்தின் பொதுச் செயலாளர் இரா.முகுந்தன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
‘தில்லி தமிழ்ச் சங்கத்தில் ஒரு தோரண வாயில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாளாக இருந்து வந்தது. அதை நிறைவேற்றும் விதத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் 25 லட்சம் ரூபாயை அளித்து தோரண வாயிலுக்கு வழி வகுத்து விட்டார்.
தோரணவாயிலை அமைக்கும் பொறுப்பை, பொறியாளர் கே.கருணாநிதியிடம் வழங்கி யுள்ளோம்.