மணிப்பூர் கொடூரம்: எஃப்ஐஆர் பதிந்து விசாரணையை தொடங்கியது சிபிஐ

மணிப்பூர் கலவரம் | கோப்புப் படம்
மணிப்பூர் கலவரம் | கோப்புப் படம்
Updated on
1 min read

புதுடெல்லி: மணிப்பூர் வைரல் வீடியோ விவகாரம் தொடர்பாக சிபிஐ முறைப்படி இன்று (சனிக்கிழமை) எஃப்ஐஆர் பதிந்து விசாரணையை தொடங்கியது.

மணிப்பூர் வன்முறை குறித்து மத்திய புலனாய்வு முகமை அல்லது சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று மணிப்பூர் மாநில அரசு ஜூலை 26-ம் தேதி பரிந்துரை செய்தது. மத்திய அரசும் இந்த வழக்கில் சிபிஐ விசாரிக்க ஜூலை 27-ம் தேதி பரிந்துரை செய்தது.

மணிப்பூர் வன்முறை குறித்த வழக்கு விசாரணையை மாநிலத்துக்கு வெளியே மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. மேலும், அங்கு நடந்த கூட்டுப் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட வன்முறை தொடர்பான அனைத்து வழக்குகளையும் 6 மாத காலத்துக்குள் முடிக்க உத்தரவிடுமாறும் அரசு கோரியது.

மணிப்பூரில் இரண்டு பழங்குடியினப் பெண்கள் மைத்தேயி சமூக ஆண்கள் கும்பல் ஒன்றால் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படும் வீடியோ ஒன்று கடந்த புதன்கிழமை (ஜூலை 19) வெளியாகி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் ஒரு பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருந்தார்.

இதுகுறித்து கடும் கண்டனம் தெரிவித்திருந்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்தது. இந்த நிகழ்வால் மிகவும் தொந்தரவுக்குள்ளாகி இருப்பதாக தெரிவித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, மணிப்பூர் வீடியோ தொடர்பாக விரைவாக நடவடிக்கை எடுக்கும்படி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியதுடன், இந்தச் சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து உச்ச நீதிமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in