எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் எப்போது? - திங்கட்கிழமை முடிவு

எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் எப்போது? - திங்கட்கிழமை முடிவு
Updated on
1 min read

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாத தேதி திங்கட்கிழமை முடிவு செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. அப்போது மணிப்பூர் வீடியோ வெளியானதால், அந்த பிரச்சினையை கிளப்பி நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கின. மணிப்பூர் வன்முறை குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பதில் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் மோடியை நாடாளுமன்றத்தில் பதில் அளிக்க வைக்கும் வியூகமாக, அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர எதிர்க்கட்சிகளின் ‘இண்டியா’ கூட்டணி தலைவர்கள் முடிவு செய்தனர். அதன்படி மக்களவையில் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தன. இந்த தீர்மானத்தை விவாதத்துக்கு ஏற்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். ஆனால், இதற்கான தேதி அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து விவாதம் நடைபெறும் தேதி நாளை மறுநாள் திங்கட்கிழமை முடிவு செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும். கடந்த சில நாட்களாக ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் நலத்திட்ட தொடக்க விழா நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

ஆகஸ்ட் 1-ம் தேதி மகாராஷ்டிராவில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளார். அதனால் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் மற்றும் ஓட்டெடுப்பு ஆகியவை அடுத்த வாரம் புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் நடைபெற வாய்ப்புள்ளது.

மழைக்கால கூட்டத் தொடர் ஆகஸ்ட் 11-ம் தேதியுடன் முடிவடைகிறது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற ஏராளமான மசோதாக்கள் நிலுவையில் உள்ளன.

நம்பிக்கையில்லா தீர்மானம் பற்றி மத்திய அரசுக்கு எந்த கவலையும் இல்லை. 543 உறுப்பினர்கள் கொண்ட மக்களவையில் 5 இடங்கள் காலியாக உள்ளன. இதனால் பெரும்பான்மையை நிரூபிக்க 270 வாக்குகள் தேவை. பாஜக.வுக்கு 301 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. தே.ஜ கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் எம்.பி.க்களையும் சேர்த்தால் ஆதரவு எண்ணிக்கை 331 ஆக உள்ளது. கூட்டணியில் இல்லாத ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பிஜூ ஜனதா தளம், பகுஜன் சமாஜ், தெலுங்கு தேசம் கட்சி ஆகிய கட்சிகள் ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளாமல் மத்திய அரசுக்கு மறைமுக ஆதரவை அளிக்கலாம். இதன்மூலம் பெரும்பான்மை ஓட்டுக்களின் எண்ணிக்கை மேலும் குறையும்.

நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறாது என எதிர்க்கட்சிகளுக்கு நன்கு தெரியும். அவர்களின் ஒரே நோக்கம், மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடியை பதில் அளிக்க வைப்பதுதான். ‘‘இந்த விவாதம் மணிப்பூர் மாநிலத்தின் நீதிக்கான போராட்டம். மணிப்பூர் மக்களின் உரிமைக்காக, ‘இண்டியா’ கூட்டணி துணை நிற்கிறது என்பதை இந்த விவாதம் மூலம் தெரிய வைப்போம் ’’ என காங்கிரஸ் கட்சியின் கவுரவ் கோகாய் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in