‘இண்டியா’வை சமாளிக்க தயாராகும் என்டிஏ - கூட்டணி கட்சிகளின் 316 எம்.பி.க்களை சந்திக்கிறார் பிரதமர்

‘இண்டியா’வை சமாளிக்க தயாராகும் என்டிஏ - கூட்டணி கட்சிகளின் 316 எம்.பி.க்களை சந்திக்கிறார் பிரதமர்
Updated on
1 min read

புதுடெல்லி: பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் 316 எம்.பி.க்களை 11 நாட்களில் சந்திக்கிறார் பிரதமர் மோடி.

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமர் மோடியை பதவியிலிருந்து அகற்ற, இதுவரை இல்லாத வகையில் எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடி வருகின்றன. ‘இண்டியா’ எனும் பெயரில் கூட்டணி அமைத்துள்ள இவர்களை சமாளிக்க என்டிஏவும் தயாராகி வருகிறது. இதற்காக பிரதமர் மோடி 38 கூட்டணிக் கட்சிகள் மற்றும் பாஜகவின் 316 எம்.பி.க்களை சந்தித்து பேச உள்ளார்.

இவர்களை 11 குழுக்களாகப் பிரித்து ஒருங்கிணைக்கும் பொறுப்பு, 21 மத்திய அமைச்சர்களிடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு, ஜுலை 31 முதல் ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் வரும் 2024 மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று தங்கள் ஆட்சியை மூன்றாவது முறையாகத் தொடர திட்டம் வகுக்கப்படுகிறது. பிராந்தியம் வாரியாக பிரிக்கப்பட்டுள்ள இக்குழுக்களுடனான ஒவ்வொரு சந்திப்பிலும் இரண்டு மூத்த தலைவர்கள் பிரதமர் மோடியுடன் இருப்பார்கள்.

முதல் சந்திப்பு வரும் ஜூலை 31 மாலை 6.30 முதல் 7.30 மணி வரை நடைபெற உள்ளது. 83 எம்.பி.க்கள் கலந்துகொள்ளும் இந்த சந்திப்பில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவும், மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும் இடம் பெறுகிறார்கள். 2-வது சந்திப்பில் அமைச்சர்கள் அமித்ஷாவும், ராஜ்நாத்சிங்கும் இடம்பெறுகின்றனர்.

பிரதமருடனான இந்த சந்திப்பில் இடம்பெறும் எம்.பி.க்கள் தங்கள் தொகுதி வளர்ச்சி, மத்திய அரசு திட்டங்களின் நிலை, மக்களின் பிரச்சினைகள் போன்றவை பற்றி ஆலோசிக்க உள்ளனர். இந்த சந்திப்புகளின் மூலம் 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகளை பெற பாஜக முயற்சிக்கிறது. அடுத்து வரவிருக்கும் 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் வெல்வதும் இந்த சந்திப்பின் நோக்கமாக உள்ளது.

மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலங்கானா, மிசோரம் ஆகியவற்றில் தேர்தல் நடைபெற உள்ளது.

இவற்றில் தங்கள் கட்சி 20 வருடங்களாக ஆட்சி செய்யும் மத்தியபிரதேசம் பாஜகவிற்கு முக்கியமாகி உள்ளது. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் இதர கட்சிகளின் சில எம்எல்ஏக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. ஆனால் காங்கிரஸ் முக்கியத் தலைவரான ஜோதிராதித்ய சிந்தியா தலைமையில் குறிப்பிட்ட எம்எம்ஏக்களை தங்கள் கட்சிக்கு இழுத்து பாஜக ஆட்சி அமைத்தது. எனவே ம.பி.யில் தங்கள் ஆட்சியை 5-வது முறையாக தக்கவைப்பது பாஜகவிற்கு பெரும் சவாலாகி உள்ளது.

சட்டப்பேரவை தேர்தலின் முடிவுகளை பொறுத்தே பாஜகவிற்கு மக்களவை தேர்தலிலும் எம்.பி.க்கள் கிடைக்கும். தற்போது ம.பி.யின் 29 மக்களவைத் தொகுதிகளில் 28 பாஜக வசம் உள்ளன. இந்த 5 மாநிலங்களிலும் வெற்றியை உறுதிப்படுத்தும் பொறுப்பை அமைச்சர் அமித்ஷாவும், தலைவர் நட்டாவும் ஏற்றுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in