

உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள இராக்கில் இருந்து கடந்த ஒரு மாதத்தில் 3,500-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். மொசுல் நகரில் தீவிரவாதிகளின் பிடியில் உள்ள 39 கட்டுமானத் தொழிலாளர்கள் உள்பட சுமார் 50 பேர் இன்னும் போர் நடைபெறும் பகுதியில் சிக்கியுள்ளனர்.
இதுகுறித்து டெல்லியில் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “இராக்கில் இருந்து இந்தியர்கள் தாயகம் திரும்புவதற் காக முதலில் 2,500 பயணச்சீட்டுகளும், பின்னர் தொழிலாளர்களுக்காக அங்குள்ள நிறுவனங்கள் வழங்கிய 1,000 பயணச்சீட்டுகளும் பயன்படுத் தப்பட்டுள்ளன.
சன்னி தீவிரவாதிகளின் பிடியில் உள்ள 39 இந்தியர்களை மீட்க அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டுள்ளோம். இதற்காக இராக்கின் அண்டை நாடுகளுடனும் தொடர்பில் இருந்து வருகிறோம்” என்றார்.
இந்நிலையில் சிக்கலான பகுதியில் இருக்கும் இந்தியர்கள் சிலர், அவர்களை மீட்க முயற்சி மேற்கொண்டபோதிலும், நாடு திரும்ப விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
இராக்கில் போர் நடைபெறாத பகுதியில் 6,500 இந்தியர்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவர்கள் பெரும்பாலானோர் குர்திஸ்தான், பஸ்ரா பகுதியில் உள்ளனர்.