Published : 28 Jul 2023 06:58 AM
Last Updated : 28 Jul 2023 06:58 AM
சிகார்: சிவப்பு டைரியில் உள்ள ரகசியத்தால் வரும் ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடையும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அங்கு அடுத்த சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற ஜாட் சமூகத்தினரின் ஆதரவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக ஜாட் சமுதாயத்தினர் அதிகம் வசிக்கும் சிகார் மாவட்டத்தில் காங்கிரஸ் வலுவாக உள்ளது.
இந்நிலையில், சிகார் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். வேறு சில திட்டங்களை தொடங்கி வைத்தார். குறிப்பாக 1.25 லட்சம் பிஎம் கிசான் சம்ரிதி கேந்திராவை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.இதன்மூலம், விவசாயிகளுக்கு உரம் மற்றும் விதைகள் விற்பனை மற்றும் இதர சேவைகள் வழங்கப்படுகின்றன.
பின்னர் அங்கு பாஜக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
ராஜஸ்தானில் சமீபத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சர் ராஜேந்திர குதா, தன்னிடம் சிவப்பு டைரி இருப்பதாகக் கூறியுள்ளார். அதில், முதல்வர் அசோக் கெலாட்டின் நிதி முறைகேடு தொடர்பான விவரங்கள் இருப்பதாக குதா கூறியுள்ளார். காங்கிரஸ் ஊழல் கடையின் புதிய தயாரிப்புதான் இந்த சிவப்பு டைரி. காங்கிரஸாரின் கருப்பு பக்கங்கள் அதில் உள்ளன. இந்த டைரி வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
கெலாட் உரை புறக்கணிப்பா? ராஜஸ்தானில் நேற்று நடைபெற்ற வளர்ச்சி திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் அசோக் கெலாட் கலந்துகொள்வதாக இருந்தது. ஆனால், அவர் பங்கேற்கவில்லை.
இதுகுறித்து கெலாட் நேற்று காலையில் தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று நீங்கள் (பிரதமர்) ராஜஸ்தான் வருகிறீர்கள். இங்கு நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் என்னுடைய 3 நிமிட உரை இடம்பெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், உங்கள் அலுவலகம் எனது உரையை திடீரென நீக்கி உள்ளது. எனவே, உங்களை நேரில் வரவேற்க முடியாத நிலையில் உள்ளேன். ஆகையால் இந்த பதிவின் மூலம் உங்களை ராஜஸ்தானுக்கு வரவேற்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் தனது ட்விட்டர் பக்கத்தில், “ராஜஸ்தானில் பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு முதல்வருக்கு முறைப்படி அழைப்பு விடுத்தோம். ஆனால், காலில் காயம் ஏற்பட்டிருப்பதால் முதல்வர் பங்கேற்கமாட்டார் என அவருடைய அலுவலகம் தெரிவித்துள்ளது” என பதிவிடப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு ரூ.17 ஆயிரம் கோடி விடுவிப்பு: சிகார் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமரின் விவசாயிகள் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் 14-வது தவணையாக ரூ.17 ஆயிரம் கோடியை விடுவித்தார். இதன்மூலம் 8.5 கோடி பேர் பயனடைந்தனர். மேலும் இந்நிகழ்ச்சியில் 5 புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்கி வைத்தார். இதுதவிர, 7 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 6 ஏகலவ்யா மாதிரி உறைவிட பள்ளிகளையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT