

இனிப்புப் பண்டமான ரசகுல்லாவுக்கான புவிசார் குறியீடு மேற்கு வங்கம் அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், "நம் அனைவருக்கும் இனிப்பான செய்தி. மேற்குவங்கத்துக்கு ரசகுல்லாவுக்கான புவிசார் குறியீடு வழங்கப்பட்டதில் மகிழ்ச்சியும் பெருமிதமும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக ஓர் இனிப்புச் சண்டை:
ரசகுல்லாவுக்கான புவிசார் குறியீடு தங்களுக்கு கிடைத்ததை மம்தா பானர்ஜி இவ்வளவு கொண்டாடக் காரணம் இருக்கிறது. ரசகுல்லா எங்களது பண்டமே ஒடிசாவும் மேற்குவங்கமும் போட்டி போட்டுக்கொண்டநிலையில் இப்போது அதற்கான புவிசார் குறியீடு மேற்குவங்கத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. பாலாடைக்கட்டியால் ஆன பஞ்சு போன்ற உருண்டைகளை பாகில் ஊறவைத்து தயாரிப்பதே ரசகுல்லா.
ரசகுல்லாவை 1868-ல் நபின் சந்திர தாஸ் முதலில் தயாரித்து அறிமுகம் செய்ததாக மேற்கு வங்கம் உரிமை கோரியது. தங்களது ரசகுல்லா 150 வருட பழைமை வாய்ந்தது என்றது மேற்கு வங்கம்.
ஒடிசாவோ, தங்களது ரசகுல்லா குறைந்தது 300 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என்றும், ஜகன்நாத கடவுள் லட்சுமி தாயாருக்கு இதனை வழங்கிய ஐதீகம் இருப்பதாகவும், இதற்கு மேற்குவங்கம் உரிமை கோர கூட வாய்ப்பு இல்லை என்று கூறியது.
இந்நிலையில், மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் இனிப்புப் பண்டமான ரசகுல்லாவுக்கு புவீசார் குறியீடு அளிக்க மேற்கு வங்கம் விண்ணப்பித்தது. மேற்குவங்கத்தின் விண்ணப்பம் ஏற்கப்பட்டு புவிசார் குறியீடும் வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே, மம்தா இனிப்பான செய்தி என ட்வீட் செய்திருக்கிறார்.