

ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டராக பணியாற்றும் தனது தம்பி சுரேஷ் கவுடாவிடம் மத்திய ரயில்வே பட்ஜெட் குறித்து அமைச்சர் சதானந்த கவுடா யோசனைகளை கேட்டுள்ளது தெரியவந்துள்ளது.
கர்நாடக மாநிலம் மங்களூர் அருகேயுள்ள நந்திகூரில் சுரேஷ் கவுடா ஸ்டேஷன் மாஸ்டராக பணியாற்றி வருகிறார். தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பது:
பட்ஜெட்டுக்கு முன்பு ரயில் கட்டணத்தை உயர்த்திய ஏமாற்றம் அளித்தது என்றாலும் அது நியாயமானதுதான். மக்களால் ஏற்றுக் கொள்ளக் கூடிய சிறிய அளவிலான கட்டண உயர்வு மூலம் ரயில்வேயில் பல நல்ல திட்டங்களை செயல்படுத்த முடியும்.
இரவு உணவின்போது நானும் அவரும் (சதானந்த கவுடா) ரயில்வே குறித்து அடிக்கடி பேசுவோம். நான் அவருக்கு சில யோசனைகளைத் தெரிவிப்பேன். நான் ரயில்வே பணியாளராக உள்ள நிலையில், அவர் அத்துறை அமைச்சரானது அதிர்ஷ்டவசமானதுதான். இப்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது என்று கூறலாம். அடுத்து வரும் ஆண்டுகளில் அவர் மிகச் சிறப்பான பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.