2017 சர்வதேச பாலின இடைவெளி அறிக்கை வெளியீடு: இந்தியாவுக்கு 108-வது இடம்; பாலின சமத்துவத்தை எட்ட இன்னும் 100 ஆண்டுகள் ஆகும்

2017 சர்வதேச பாலின இடைவெளி அறிக்கை வெளியீடு: இந்தியாவுக்கு 108-வது இடம்; பாலின சமத்துவத்தை எட்ட இன்னும் 100 ஆண்டுகள் ஆகும்
Updated on
2 min read

2017-ம் ஆண்டுக்கான சர்வதேச பாலின இடைவெளி அறிக்கையை சர்வதேச பொருளாதார கூட்டமைப்பு (World Economic Forum) வெளியிட்டுள்ளது. இதில், இந்தியா 108-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. சீனா, வங்கதேசத்தை விட இந்த குறியீட்டில் இந்தியா பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் பின்னடைவுக்கு பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பு குறைவாக இருப்பதும் பெண் ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் குறைவாக இருப்பதுமே முக்கிய காரணமாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச பொருளாதார கூட்டமைப்பு என்ற அமைப்பினால் இந்த அறிக்கை ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது. 2006-ம் ஆண்டு முதல் இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது. சுகாதாரம், கல்வி, பணியிடம், அரசியல் பிரதிநிதித்துவம் ஆகிய 4 அளவுகோல்கள் அடிப்படையில் பாலின இடைவெளி கணிக்கப்படுகிறது.

அந்தவகையில், இந்த ஆண்டுக்கான அறிக்கை இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகளவிலும் பாலின இடைவெளி பின்னடைவையே சந்தித்துள்ளது. இந்த கணக்கீடு வெளியிடத் தொடங்கிய 2006-ம் ஆண்டிலிருந்து முதன்முறையாக 2017-ல் ஆண் - பெண் இடைவெளி கவலைப்படத்தக்க அளவு அதிகரித்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு குறியீட்டின் அடிப்படையில் பார்த்தால் சர்வதேச அளவில் பாலின சமத்துவம் ஏற்பட 100 ஆண்டுகள் ஆகும் எனக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு அறிக்கையின்படி பாலின சமத்துவத்தை ஏற்படுத்த 83 ஆண்டுகள் தேவைப்படும் எனக் கூறப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு அறிக்கை இந்த இலக்கை எட்ட இன்னும் 100 ஆண்டுகள் தேவைப்படும் எனக் கூறியிருப்பது பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.

பணியிடத்தில் மிக மோசம்:

பாலின சமத்துவம் பணியிடத்தில் மிக மோசமாக பேணப்படுகிறது என இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. பணியிடத்தில் பாலின சமத்துவம் ஏற்பட இன்னும் 217 ஆண்டுகள் ஆகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாருக்கு முதலிடம்?

பாலின இடைவெளியைக் குறைப்பதில் ஐஸ்லாந்து முதலிடத்தில் இருக்கிறது. 88% சதவீதம் பாலின இடைவெளியை இந்நாடு குறைத்துள்ளது. தொடர்ந்து 9 ஆண்டுகளாக ஐஸ்லாந்து முதலிடத்தில் இருக்கிறது. அதனைத்தொடர்ந்து, முறையே நார்வே (2), பின்லாந்து (3), ருவாண்டா (4), ஸ்வீடன் (5), நிகாராகுவா (6), ஸ்லோவேன்யா (7), அயர்லாந்து (8), நியூசிலாந்து (9) மற்றும் பிலிப்பைன்ஸ் (10) இடங்களில் உள்ளன.

இந்தியாவுக்கு சவால்:

சர்வதேச பாலின இடைவெளி கணக்கிட பயன்படுத்தப்படும் 4 அளவுகோல்களில் சுகாதார ரீதியிலான பாலின சமத்துவத்தில் இந்தியா 141-வது இடத்திலும் பொருளாதார பங்களிப்பில் 139-வது இடத்திலும் உள்ளது. அரசியல் பிரதிநிதித்துவத்தில் இந்தியப் பெண்கள் பின் தங்கியிருப்பதும் சர்வதேச அளவில் இந்தியா பின்தங்க ஒரு காரணம் எனக் கூறப்பட்டுள்ளது. 1966-ல் இந்தியாவின் முதல் பெண் பிரதமர் பதவியேற்றபோது இந்தியா அரசியல் பிரதிநிதித்துவ பட்டியலில் 20-வது இடத்தில் இருந்தது. ஆனால், இப்போதும் அதே இடத்திலேயே தேங்கி நிற்கிறது. இந்தியாவில் புதுயுக பெண்கள் அரசியலில் ஈடுபட வேண்டும் என அந்த அறிக்கை அறிவுறுத்தியுள்ளது.

அதேபோல் இந்தியாவில் பணியிடத்தில் நிலவும் பாலின இடைவெளியால் பொருளாதாரத்தில் அவர்கள் பங்களிப்பு குறைவாக இருக்கிறது. இந்தியாவில் 66% பெண்களின் உழைப்பு ஊதியமற்றதாகவே இருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in