Published : 27 Nov 2017 11:23 AM
Last Updated : 27 Nov 2017 11:23 AM

ஜெயலலிதா மகளாக அறிவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பெங்களூரு பெண் மனுத்தாக்கல்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மகளாக தன்னை அறிவிக்கக்கோரி பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ஜெயலலிதாவின் மகள் எனக்கூறி ஏற்கனவே பெண் ஒருவர் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா என்ற பெண்ணும் இதேபோன்ற மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது:

‘‘மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மகளாக 1980ம் ஆண்டு பிறந்தேன். ஜெயலலிதாவின் அத்தை ஜெயலட்சுமி தான் பிரசவம் பார்த்தார். ஜெயலலிதாவிற்கு அவப்பெயர் ஏற்படும் என்பதால் தான் இதை வெளியே சொல்லவில்லை. எனது வளர்ப்புத் தாயான சைலஜாவும், வளர்ப்புத் தந்தையான சாரதியும் இறந்துவிட்டனர்.

நான் ஜெயலலிதாவின் மகள் என்பதை நிரூபிக்க அவரது உடலைத் தோண்டி எடுத்து மரபணு (டிஎன்ஏ) பரிசோதனை நடத்த வேண்டும். வைணவ ஐயங்கார் சமூக முறைப்படி இறுதிச்சடங்கு நடத்தப்படவில்லை. எனவே, அந்த முறையில் அவருக்கு இறுதிச்சடங்குகள் நடத்தப்பட வேண்டும்’’ என அந்த மனுவில் அம்ருதா கூறியுள்ளார்.

இந்த மனு இன்று (திங்கள்) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x